‘ஒகி’ புயலால் இறந்தவர்களுக்கு கேரளாவை போல் தமிழகத்திலும் நிவாரண உதவி வழங்க வேண்டும்
‘ஒகி‘ புயலால் இறந்தவர்களுக்கு கேரளாவில் வழங்குவதை போல் தமிழகத்திலும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்துக்கு வந்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியில் உள்ள புதிய அரசு விருந்தினர் மாளிகையில் நேற்று சந்தித்து பேசினார். காலை 9 மணி முதல் 10 மணிவரை இந்த சந்திப்பு நடந்தது.
அப்போது, குமரி மாவட்டத்தில் ‘ஒகி‘ புயலால் ஏற்பட்ட சேதங்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் ஆகியவற்றை எடுத்துக்கூறி மேற்கொள்ளவேண்டிய மீட்பு நிவாரண நடவடிக்கைகள் குறித்து கவர்னரிடம், பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கி கூறினார்.
பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–
‘ஒகி‘ புயலின் காரணமாக தமிழகம் மற்றும் கேரள மீனவர்கள், மராட்டியம், குஜராத் மாநிலங்கள் மற்றும் லட்சத்தீவு போன்ற பகுதிகளில் கரை சேர்ந்து இருக்கிறார்கள்.
நான் குஜராத், மராட்டிய மாநில அரசுகளிடமும், மீனவர்கள் கரை சேர்ந்துள்ள பகுதியைச் சேர்ந்த மாவட்ட கலெக்டர்களிடமும் தொடர்புகொண்டு பேசியிருக்கிறேன். அங்குள்ள மீனவர்களுக்கு உணவு கொடுக்கப்படவில்லை என்று செய்தி வந்தது தவறு. ஆனால் இரு மாநில அரசுகளும் நமது மீனவர்களுக்கு என்னென்ன தேவையோ அதையெல்லாம் செய்து கொடுத்துக் கொண்டு இருக்கின்றன.
அந்த மாநிலங்களில் கரைசேர்ந்த மீனவர்கள் கடல் மார்க்கமாக சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு தேவையான டீசல் உள்ளிட்ட அனைத்து வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறேன்.
லட்சத்தீவின் உள்துறை இணை மந்திரி மூலம் லட்சத்தீவில் கரை சேர்ந்தவர்களை மீட்டுவரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக் கொண்டிருக்கிறேன். இதுதொடர்பாக குமரி மாவட்டம் வந்துள்ள தமிழக கவர்னரையும் சந்தித்து பேசினேன். அவரிடமும் மீனவர்களை விரைவாக மீட்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டேன்.
அகஸ்தீஸ்வரம், தோவாளை ஒன்றிய பகுதிகளிலும், மலை கிராமங்களிலும் புயலால் சேதமடைந்த பகுதிகளை முழுமையாக பார்வையிட்டேன். இன்று (அதாவது நேற்று) திருவட்டார், குலசேகரம், பேச்சிப்பாறை பகுதிகளுக்கு சென்று சேதப்பகுதிகளை ஆய்வு செய்ய இருக்கிறேன்.
பல இடங்களில் மரங்கள் முழுமையாக அகற்றப்படவில்லை. வீடுகள் மீது விழுந்த மரங்கள் அப்படியே கிடக்கின்றன. இதுதொடர்பாக கலெக்டரிடம் கூறி உள்ளேன்.
புயலால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு சரியான ஏற்பாடுகள் செய்யவில்லை. ஒட்டுமொத்தமாக குமரி மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக புயலால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு கேரள அரசை போல் தமிழக அரசும் நிவாரண உதவி கட்டாயம் வழங்க வேண்டும். புயல் பாதிப்பு கணக்கெடுப்பு நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் மீனவர்களாக இருந்தாலும் சரி, விவசாயிகளாக இருந்தாலும் சரி அவர்கள் மனநிலையை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.
விவசாயிகளை பாதுகாக்க கூடிய பயிர் காப்பீடு திட்டத்தை நமது மாவட்டம் சரியாக செயல்படுத்தவில்லை. குமரி மாவட்டத்தில் 3 லட்சம் விவசாயிகள் இருக்கிறார்கள். ஆனால் 500–க்கும் மேற்பட்ட விவசாயிகள்தான் இந்த திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட வளர்ச்சி கூட்டத்தில் நான் தெளிவாக கூறினேன்.
காணாமல்போன குமரி மாவட்ட மீனவர்களை கடற்படை விமானங்கள், கப்பல்கள் மற்றும் கடலோர காவல்படை கப்பல்கள், விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் தேடும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறேன்.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.