தனியார் நிதிநிறுவனத்தை முதலீட்டாளர்கள் முற்றுகை கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக புகார்


தனியார் நிதிநிறுவனத்தை முதலீட்டாளர்கள் முற்றுகை கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக புகார்
x
தினத்தந்தி 8 Dec 2017 4:30 AM IST (Updated: 8 Dec 2017 1:49 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் கோடிக் கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக கூறி தனியார் நிதி நிறுவனத்தை முதலீட்டாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல்,

நாமக்கல் - சேலம் சாலை முருகன் கோவில் பஸ்நிறுத்தம் அருகே உள்ள வணிக வளாகம் ஒன்றின் முதல் மாடியில் தனியார் நிதிநிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிதிநிறுவனம் மூலம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை ஏலச்சீட்டு நடத்தப்பட்டு வந்தது. இதில் பல முதலீட்டாளர்கள் தினசரியும், சிலர் மாதம் ஒருமுறையும் பணம் செலுத்தி வந்தனர்.

இந்த பணத்தை வசூல் செய்ய 5-க்கும் மேற்பட்ட ஊழியர்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் கடந்த 45 நாட்களுக்கு முன்பு முதலீட்டாளர்களுக்கு சரியாக முதிர்வு தொகை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நிதிநிறுவனம் மூடப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே நேற்று மூடப்பட்ட நிதிநிறுவனத்தை அதில் பணியாற்றி வந்த மண்டல மேலாளர் திறந்து உள்ளே சென்றார். இது குறித்து தகவல் அறிந்ததும் அதில் முதலீடு செய்த ஏராளமான முதலீட்டாளர்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் நிதிநிறுவனத்தை முற்றுகையிட்டு தாங்கள் செலுத்திய பணத்தை உடனடியாக திருப்பி தர வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் அங்கு வந்த நிதிநிறுவன மண்டல மேலாளரிடமும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர் வருகிற 28-ந் தேதிக்குள் அனைவரின் பணத்தையும் திருப்பி கொடுப்பதாக கூறினார். ஆனால் அதை ஏற்க மறுத்த முதலீட்டாளர்கள், அவருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் அந்த நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தியதற்கான அடையாளமாக முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகங்கள் அங்கு சிதறி கிடந்தன. அதில் நமது புத்தகம் உள்ளதா? என சில முதலீட்டாளர்கள் தேடுவதையும் காண முடிந்தது.

இது குறித்து அந்த நிதிநிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்த சிலர் கூறியதாவது:-

இந்த நிதிநிறுவனம் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு இயங்கி வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்து உள்ளனர். தொடக்கத்தில் சரியாக முதிர்வு தொகையை வழங்கி வந்தனர். ஆனால் சமீபகாலமாக முதிர்வு தொகை வழங்கவில்லை. முதிர்வு தொகைக்காக நிதிநிறுவனம் சார்பில் சிலருக்கு காசோலை வழங்கப்பட்டது. அந்த காசோலைகளும் நிதிநிறுவன கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது. கோடிக்கணக்கில் எங்களின் பணத்தை மோசடி செய்த நிதிநிறுவன அதிபர் மற்றும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து, நாங்கள் செலுத்திய பணம் திரும்ப கிடைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையே அங்கு வந்த நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்த முதலீட்டாளர்களை சமரசம் செய்தார். அப்போது அவர் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்தவர்கள் புகார் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். பின்னர் விசாரணைக்காக போலீசார் மண்டல மேலாளரை நாமக்கல் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Next Story