ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேறக்கோரி கதிராமங்கலத்தில் காத்திருப்பு போராட்டம் 149-வது நாளாக நடந்தது


ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேறக்கோரி கதிராமங்கலத்தில் காத்திருப்பு போராட்டம் 149-வது நாளாக நடந்தது
x
தினத்தந்தி 8 Dec 2017 4:00 AM IST (Updated: 8 Dec 2017 2:19 AM IST)
t-max-icont-min-icon

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேறக்கோரி கதிராமங்கலத்தில் 149-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

திருவாலங்காடு,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலம் கிராம பகுதியில் கச்சா எண்ணெய் எடுத்து வரும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தி கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். நேற்று 149-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மக்களின் போராட்டத்தை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. தஞ்சைக்கு வந்த முதல்-அமைச்சரிடம் குடியுரிமையை ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்த இருப்பதாக அறிவித்தோம்.

இதையடுத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்திய திருவிடைமருதூர் தாசில்தார், தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, கதிராமங்கலம் கிராமத்துக்கு வருகை தந்து போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என கூறினார். அதை ஏற்று குடியுரிமையை ஒப்படைக்கும் போராட்டத்தை கைவிட்டோம்.

அறிவிக்கவில்லை

ஆனால் கலெக்டர் எப்போது கதிராமங்கலம் வருவார் என இதுவரை அறிவிக்கவில்லை. ஜனநாயக நாட்டில் மக்களின் தேவையை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் மாவட்ட நிர்வாகம் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story