வாராக்கடன்களை வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 27-ந்தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்


வாராக்கடன்களை வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 27-ந்தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 8 Dec 2017 4:15 AM IST (Updated: 8 Dec 2017 2:19 AM IST)
t-max-icont-min-icon

வாராக்கடன்களை வசூலிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வருகிற 27-ந்தேதி வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மாநில பொதுச்செயலாளர் அருணாசலம் கூறினார்.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் அருணாசலம் தஞ்சையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியன் வங்கி ஊழியர் சங்க 39-வது மாநில மாநாடு தஞ்சையில் நாளை (சனிக்கிழமை), நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

இந்தியா முழுவதும் வங்கிகளுக்கு வாராக்கடன் ரூ.15 லட்சம் கோடி உள்ளது. இதில் 12 நிறுவனங்கள் மட்டும் ரூ.2½ லட்சம் கோடி செலுத்த வேண்டி உள்ளது. இந்த கடன்களை வசூலிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு வங்கிகள் ரூ.1 லட்சத்து 58 ஆயிரத்து 982 கோடி வருவாய் ஈட்டியது. ஆனால் கடந்த ஆண்டு வாராக்கடன் ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்து 370 கோடி. வருவாயை காட்டிலும், வாராக்கடன் அதிகமாக இருப்பதை காட்டி வங்கிகளின் எண்ணிக்கையை ரிசர்வ் வங்கி குறைத்து வருகிறது. எனவே கடன் வாங்கிக்கொண்டு திருப்பி செலுத்தாதவர்கள் பட்டியலை வெளியிட வேண்டும். அவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிக தொகை கடன் வாங்கி திரும்ப செலுத்தாதவர்களை விட்டுவிட்டு, விவசாய கடன் வாங்கியவர்களிடம் இருந்து கடனை வசூலிக்க கடும் நடவடிக்கை எடுப்பதை கைவிட வேண்டும். கடனை வசூலிக்கும் பொறுப்பை வங்கிகள் தனியாரிடம் விடுவதை கைவிட வேண்டும். வங்கியில் கடன் வாங்கி ஏமாற்றியவர்களை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். சேமிப்பு பணத்திற்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 27-ந்தேதி அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்,

பேட்டியின் போது மாநாட்டு வரவேற்புக்குழு தலைவர் சந்திரகுமார், செயலாளர் அன்பழகன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம், கும்பகோணம் கோட்ட போக்குவரத்துக்கழக ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செயலாளர் துரை.மதிவாணன் மற்றும் வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

Next Story