நந்தூர் சந்திப்பு அருகே தனியார் பஸ்–கன்டெய்னர் லாரி மோதல்; அரசு ஆஸ்பத்திரி பெண் ஊழியர் பலி


நந்தூர் சந்திப்பு அருகே  தனியார் பஸ்–கன்டெய்னர் லாரி மோதல்; அரசு ஆஸ்பத்திரி பெண் ஊழியர் பலி
x
தினத்தந்தி 8 Dec 2017 3:00 AM IST (Updated: 8 Dec 2017 2:40 AM IST)
t-max-icont-min-icon

நந்தூர் சந்திப்பு அருகே தனியார் பஸ்சும், கன்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

மங்களூரு,

நந்தூர் சந்திப்பு அருகே தனியார் பஸ்சும், கன்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் அரசு ஆஸ்பத்திரி பெண் ஊழியர் ஒருவர் பலியானார். மேலும் 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

தனியார் பஸ்–கன்டெய்னர் லாரி மோதல்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் பிகரனகட்டேவில் இருந்து ஹம்பன்கட்டா நோக்கி நேற்று முன்தினம் அதிகாலை தனியார் பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் 20 பயணிகள் பயணம் செய்தனர். இந்த நிலையில் தனியார் பஸ் நந்தூர் சந்திப்பு அருகே வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிரே பனம்பூரில் இருந்து பம்புவெல் நோக்கி வந்த குஜராத் மாநில பதிவு எண் கொண்ட கன்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக தனியார் பஸ்சின் மீது மோதியது.

மேலும் அடுத்த ரோட்டுக்கு சென்ற கன்டெய்னர் லாரி அந்த வழியாக வந்த கார் மீது மோதி நின்றது. இதில் பஸ் மற்றும் கன்டெய்னர் லாரியின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கின. விபத்தில் கார் லேசான சேதமடைந்தது. மேலும் பஸ்சில் பயணம் செய்த 18 பயணிகள் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர். இதுதவிர சிலர் லேசான காயம் அடைந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு மங்களூருவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் தனியார் பஸ்சில் பயணம் செய்த மங்களூரு தாலுகா குருபுராவை சேர்ந்த கவிதா (வயது 45) என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த 17 பேருக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த கத்ரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த விபத்தால் மங்களூரு–பிகரனகட்டே சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விபத்தில் சிக்கிய தனியார் பஸ் மற்றும் கன்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.

விபத்தில் பலியான கவிதா, மங்களூருவில் உள்ள அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். வழக்கம் போல் நேற்று காலையும் அவர் பஸ்சில் வேலைக்காக வந்தபோது தான் விபத்தில் சிக்கி பலியானது குறிப்பிடத்தக்கது.

பரபரப்பு

இந்த விபத்து குறித்து கத்ரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே விபத்து நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் கன்டெய்னர் லாரி தனியார் பஸ் மற்றும் கார் மீது மோதும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ‘வைரலாகி‘ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story