மும்பையில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க தனிப்பிரிவு தொடக்கம்


மும்பையில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க தனிப்பிரிவு தொடக்கம்
x
தினத்தந்தி 8 Dec 2017 3:57 AM IST (Updated: 8 Dec 2017 3:57 AM IST)
t-max-icont-min-icon

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க மும்பையில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் போக்சோ தனிப்பிரிவு.

மும்பை,

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க மும்பையில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் போக்சோ தனிப்பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது.

பாலியல் குற்றங்கள்

மும்பையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மும்பை பெருநகரத்தில் உள்ள 94 போலீஸ் நிலையங்களிலும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் பிரிவை(போக்சோ) தொடங்குவதற்கு போலீஸ் கமி‌ஷனர் தத்தா பட்சல்கிகர் நடவடிக்கை மேற்கொண்டார். இதன்படி அனைத்து போலீஸ் நிலையங்களிலும் போக்சோ பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த பிரிவில் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் தலா 8 பேர் பணியில் இருப்பார்கள். இதன்படி ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், ஒரு உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர், 2 சப்–இன்ஸ்பெக்டர்கள் என 4 போலீஸ் அதிகாரிகளும், பெண் போலீசார் 4 பேரும் இடம் பெற்று உள்ளனர்.

கட்டுப்படுத்த முடியும்

போலீஸ் நிலையங்களில் தொடங்கப்பட்டு உள்ள இந்த தனிப்பிரிவின் மூலம் மும்பையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்த முடியும் என மும்பை போலீஸ் நம்புகிறது.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘போக்சோ பிரிவில் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தேவையான பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. பாலியல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையின் வீட்டிற்கு போலீசார் சீருடைக்கு பதில் சாதாரண உடையில் சென்றே வாக்குமூலம் பெறுவார்கள். மேலும் குற்றம் செய்தவர் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தை இருவரையும் ஒரே வாகனத்தில் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

போக்சோ தனிப்பிரிவின் மூலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை கண்டுபிடித்தல் மற்றும் குற்றங்களை செய்பவர்களுக்கான தண்டனை விகிதம் அதிகரிக்கும் என நம்புகிறோம்’ என்றார்.


Next Story