வேப்பூர் அருகே: கோவில் பூசாரியை கட்டிப்போட்டு ரூ.6½ லட்சம் நகை-பணம் கொள்ளை


வேப்பூர் அருகே: கோவில் பூசாரியை கட்டிப்போட்டு ரூ.6½ லட்சம் நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 9 Dec 2017 5:30 AM IST (Updated: 9 Dec 2017 1:59 AM IST)
t-max-icont-min-icon

வேப்பூர் அருகே கோவில் பூசாரியை தாக்கி கட்டிப்போட்டு, ரூ.6½ லட்சம் நகை, பணத்தை 10 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வேப்பூர்,

வேப்பூர் அருகே உள்ள ஆதியூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துலிங்கம்(வயது 47). பூசாரியான இவர் காட்டுமயிலூர் அருகே கோமுகி ஆற்றங்கரையோரம் கருப்புசாமி கோவில் ஒன்றை கட்டி, அதில் தங்கியிருந்து பக்தர்களுக்கு குறி சொல்லி வருகிறார். அவ்வாறு குறி கேட்க வரும் பக்தர்கள் காணிக்கையாக பணம் மற்றும் நகைகளை செலுத்துவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் முத்துலிங்கம் கோவிலில் தங்கியிருந்தார். அப்போது 10 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று, முத்துலிங்கம் தங்கியிருந்த கோவிலுக்குள் திபு, திபுவென புகுந்தனர். தொடர்ந்து அவர்கள் முத்துலிங்கத்தை சரமாரியாக தாக்கி அருகில் இருந்த மரத்தில் கட்டிப்போட்டனர். பின்னர் அவர்கள், கோவிலில் இருந்த ரூ.3 லட்சம் மற்றும் 17 பவுன் நகைகளை கொள்ளையடித்தனர். மேலும் கோவில் முன்பு இருந்த உண்டியலையும் அவர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள், பூசாரி முத்துலிங்கம் மரத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் விரைந்து சென்று, அவரை கட்டவிழ்த்து சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

இதுகுறித்து முத்துலிங்கம் வேப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அந்த மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.6½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story