திருமாவளவன் உருவபொம்மையை எரித்த பா.ஜ.க.வை சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு


திருமாவளவன் உருவபொம்மையை எரித்த பா.ஜ.க.வை சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 9 Dec 2017 4:45 AM IST (Updated: 9 Dec 2017 2:17 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் திருமாவளவனின் உருவபொம்மையை எரித்த பாரதீய ஜனதா கட்சியினர் 3 மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருப்பூர்,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இந்து மதத்துக்கு எதிராகவும், காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் பிரதமர் மோடிக்கு எதிராகவும் கருத்து தெரிவித்ததாக நாடு முழுவதும் பாரதீய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பா.ஜனதா கட்சியின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் மாநகராட்சி அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு, தெற்கு சட்டமன்ற பொறுப்பாளர் தங்கராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சின்னசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் செந்தில்வேல், மாவட்ட பொதுசெயலாளர்கள் செந்தில்சண்முகம், பாலசுப்பிரமணியம், 3-ம் மண்டல தலைவர் கணேஷ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில், இந்துக்களுக்கும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கருத்துக்களை கூறி வரும் திருமாவளவனுக்கும், மணிசங்கர் அய்யருக்கும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. திருமாவளவனின் படத்தை செருப்பால் அடித்தும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

அப்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்களின் ஒரு பிரிவினர், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் மறைத்து வைத்திருந்த மணிசங்கர் அய்யரின் உருவபொம்மையை திடீரென எரிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் போலீசார் அங்கு விரைந்து சென்று உருவபொம்மையை அவர்களிடம் இருந்து பிடுங்கி அப்புறப்படுத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து, மற்றொரு பிரிவினர் தாங்கள் மறைத்து வைத்திருந்த திருமாவளவனின் உருவபொம்மையை மாநகராட்சி அலுவலகம் முன்பு வைத்து தீயிட்டு கொளுத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசார் அங்கு சென்று, எரிந்து கொண்டிருந்த உருவபொம்மையை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

இது தொடர்பாக உருவபொம்மை எரித்ததாக கூறி பா.ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிவராஜ், செல்வம், அசோக்குமார் ஆகியோரை போலீசார் பிடித்து சென்று அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜனதா கட்சியினர் உடனடியாக போலீசாரால் பிடித்து செல்லப்பட்ட 3 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து போலீசார் வாகனத்தை முற்றுகையிட்டனர்.
போலீசார் அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அந்த 3 பேரையும் போலீசார் விடுவித்தனர். இதையடுத்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story