மதுரை வைகை ஆற்றில் மூழ்கிய சிறுவனை மீட்கக் கோரி உறவினர்கள் சாலை மறியல்
மதுரை வைகை ஆற்றில் மூழ்கிய சிறுவனை மீட்கக் கோரி உறவினர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.
மதுரை,
வைகை அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் மதுரை ஆழ்வார்புரம் பகுதியில் வைகை ஆற்றில் வெள்ளம் செல்வதை செல்பி எடுக்க சென்ற பழனியைச் சேர்ந்த சிறுவன் ஜெயசூரியா(வயது 14) ஆற்றில் தவறி விழுந்தான்.
தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கயிறு கட்டி ஆற்றில் இறங்கி சிறுவனை தேடி பார்த்தனர். ஆனால் இரவு நீண்டநேரம் ஆகியும் அவனை கண்டு பிடிக்க முடியவில்லை.
இதை தொடர்ந்து நேற்று 2–வது நாளாக மீண்டும் தேடும் பணியை தொடங்கினார்கள். விரகனூர் அணை வரை சென்று தேடி பார்த்தனர். ஆனால் சிறுவனை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சிறுவனை உடனே கண்டுபிடிக்கக் கோரி உறவினர்கள் திடீரென்று கோரிப்பாளையம் பகுதியில் நேற்று மாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து, விரைவாக சிறுவனின் நிலை பற்றி தெரிவிப்பதாக கூறினார்கள். அதை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இரவு வரை தீயணைப்பு வீரர்கள் தேடி பார்த்தும் சிறுவன் ஜெயசூரியாவின் நிலை என்னவென்று தெரியவில்லை. தேடுதல் பணி இன்று காலை 7 மணிக்கு தொடங்கும் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.