தஞ்சையில் தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை
பெற்றோர் கண்டித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சாவூர்,
தஞ்சை ராஜப்பாநகர் அய்யனார்கோவில் தெருவை சேர்ந்தவர் நெப்போலியன்(வயது49). இவருடைய மகன் அஜித்குமார்(வயது21). தஞ்சையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 3–ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும் மாலை நேரத்தில் நண்பர்களை சந்தித்து பேசுவது வழக்கம். நேற்றுமுன்தினம் மாலையில் நண்பர்களை சந்திக்க அஜித்குமார் வரவில்லை. இதனால் அவரை தேடி நண்பர்கள் 2 பேர் வீட்டிற்கு சென்றனர்.
அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. வீட்டிற்குள் சென்றுபார்த்தபோது உத்திரத்தில் சேலையால் தூக்குப்போட்டு அஜித்குமார் தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், உடனே அவரை கீழே இறக்கி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தஞ்சை தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அஜித்குமார் உடலை கைப்பற்றி தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தஞ்சை தெற்கு போலீசில் நெப்போலியன் புகார் செய்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கல்லூரிக்கு சரிவர செல்லாததால் அஜித்குமாரை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.