வாலிபரை வெட்டிக்கொன்ற வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை
வாலிபரை வெட்டிக்கொன்ற வழக்கில், தங்கை கணவர் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
சேலம்,
சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் அசாருதீன் (வயது 27). இவர், ஆயுள்தண்டனை கைதி ஆவார். ஜாமீனில் வெளிவந்த அவர், 30.7.2014 அன்று மாலை நண்பர்கள் சிலருடன் கேரம்போர்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் வந்த கும்பல் அசாருதீனை சரமாரியாக வெட்டிக்கொன்றது.
இதுதொடர்பாக சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், காதல் திருமணம் செய்த தங்கை யாஸ்மீன்பானுவின் கணவரின் அண்ணனை 2010–ம் ஆண்டில் அசாருதீன் கொலை செய்தார். அதற்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்தது தெரிந்தது. அதன் விவரம் வருமாறு:–
அசாருதீனின் தங்கை யாஸ்மீன்பானுவை 2010–ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சபீர்அகமது காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதில் அசாருதீனுக்கு விருப்பம் இல்லை. அப்போது அவர் சவுதி அரேபியாவில் இருந்ததால் தங்கையின் திருமணத்தை தடுத்துநிறுத்த முடியவில்லை. சவுதி அரேபியாவில் இருந்து திரும்பி வந்ததும், தங்கையின் காதல் திருமணத்துக்கு அவரது கணவர் சபீர்அகமதுவின் அண்ணன் மகபூப் உதவியதை கேள்விப்பட்டார்.
அதனால் மகபூப்பை அசாருதீன் வெட்டிக்கொலை செய்தார். இந்த வழக்கில் அசாருதீனுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்த அசாருதீன் ஜாமீனில் வெளிவந்தார். யாஸ்மீன்பானுவுடன் சபீர்அகமது திருச்சிக்கு சென்று அங்கு கார் டிரைவராக வேலை செய்துவந்தார்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் இருந்து சபீர்அகமது சேலத்திற்கு வந்தபோது அண்ணனை கொலை செய்த அசாருதீனை பழிவாங்க திட்டமிட்டார். தனக்கு உதவியாக 6 பேரை அழைத்துக் கொண்டு அசாருதீனை சரமாரியாக வெட்டி கொலை செய்தார். சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அசாருதீனின் தங்கை கணவர் சபீர்அகமது (29), அவரது கூட்டாளிகள் அமானுல்லா (30), ஜீவா (25), சிவபாலன் (30), முபாரக் (30), யாசின் (29), முகமது உசேன் (23) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.
சேலம் 3–வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் இந்த வழக்கில் நேற்று நீதிபதி எழில் தீர்ப்பளித்தார். சபீர்அகமது உள்ளிட்ட 7 பேருக்கும் ஆயுள்தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.