25 மீனவர்கள் பெரிய கப்பலில் சென்று, மாயமானவர்களை தேட ஏற்பாடு பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


25 மீனவர்கள் பெரிய கப்பலில் சென்று, மாயமானவர்களை தேட ஏற்பாடு பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 10 Dec 2017 4:45 AM IST (Updated: 9 Dec 2017 10:41 PM IST)
t-max-icont-min-icon

தீவுகளைப்பற்றி நன்கு அறிந்த 25 ஆழ்கடல் மீனவர்கள் பெரிய கப்பலில் சென்று, மாயமான மீனவர்களை தேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

நாகர்கோவில்,

‘ஒகி‘ புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட மக்கள், இன்று மிகமோசமான நிலையில் இருந்து கொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட கிராமங்கள் அனைத்துக்கும் நான் சென்று வந்து கொண்டிருக்கிறேன். கடற்கரை கிராமங்களுக்கு நான் செல்ல நினைத்தபோது தொடர்ந்து போராட்டங்கள் நடந்து கொண்டிருப்பதால், இப்போது அந்தப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

குஜராத் பகுதியில் தஞ்சம் அடைந்துள்ள நமது மீனவ சகோதரர்கள், மராட்டிய மாநிலத்தில் தஞ்சம் அடைந்துள்ள மீனவ சகோதரர்கள் ஆகியோரை கவனிப்பதற்காக எனது துறையின் அலுவலகம் மூலமாக சிறப்பு அதிகாரிகளை அனுப்பி இருக்கிறோம். ஜவகர்லால் நேரு துறைமுக டிரஸ்ட் மூலமாக மீனவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். பல மீனவர்கள் புறப்பட்டு வரத்தொடங்கி உள்ளனர்.

தூத்தூரை சேர்ந்த மீனவ சகோதரர்களுக்கு கடலின் நடுவே உள்ள பல தீவுகள், மனிதர்கள் இல்லாத தீவுகள் கூட தெரியும். அம்மாதிரியான தீவுகளில்போய் மீனவர்கள் ஒதுங்கியிருந்தால்கூட பாதுகாக்க முடியும் என்று சொன்னார்கள்.

எனவே கடல் நிலைகளைப் பற்றியும், தீவுகளைப்பற்றியும் நன்கு அறிந்த 25 மீனவர்கள் பட்டியலை எடுக்கச் சொல்லி இருக்கிறேன். அவர்கள் மூலமாக மாயமான மீனவர்களை கப்பலில் சென்று தேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த 25 ஆழ்கடல் மீனவர்களை அழைத்துச் செல்வதற்காக பெரிய கப்பல் வேண்டும் என்று மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனிடம் பேசியிருக்கிறேன்.

உடனடியாக கப்பல் தயாராகி விட்டது. எப்போது வேண்டுமானாலும் கப்பலில் குமரி மாவட்ட மீனவர்கள், மாயமான மீனவர்களை தேடுவதற்காக ஆழ்கடலுக்கு புறப்பட்டு போகலாம். மாவட்ட கலெக்டர் மற்றும் குமரி மாவட்டத்துக்கு வந்துள்ள சிறப்பு அதிகாரிகளிடமும் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரோடியைச் சேர்ந்த மீனவர்களும் விரும்பினால் இந்த கப்பலில் சென்று மீனவர்களை தேடும் பணியில் ஈடுபடலாம்.

மீனவர்களின் போராட்டம் என்பது அவர்களது வேதனையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இது சாதாரண வி‌ஷயம் கிடையாது. அதேநேரத்தில் அவர்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்க வேண்டும். முழுவீச்சில் மாயமான மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

என்னைப்பொறுத்தவரையில் இந்த பிரச்சினையை அரசியலாக்க விரும்பவில்லை. மத்திய அரசு சேத மதிப்பீட்டுக்குழு தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி வரும்.

அதிகாரிகள் கொடுத்துள்ள கணக்குப்படி குமரி மாவட்டத்தில் 713 மீனவர்கள் மாயமானவர்கள் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் 3117 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். நான் ஆயரை சந்தித்து பேசினேன். அவர்கள் ஏதாவது தகவல் தந்தால், அந்த தகவல்களின் அடிப்படையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ள தயாராக இருக்கிறோம்.

கேரளாவைப்போல் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என்று நான் வலியுறுத்துவேன். அரசு வேலை என்பது ஒவ்வொரு குடும்பத்தின் நிலையைப் பொறுத்து இருக்க முடியும். முதலில் இந்த நிவாரணத்தைக் கொடுக்கட்டும். அதன்பிறகு வேலைவாய்ப்பு கொடுப்பதில் கவனம் கொடுக்க வேண்டும்.

அதேபோல மற்ற விவசாய பயிர்களைப் பொறுத்தவரையில் ஒரு பயிரால் சம்பந்தப்பட்ட விவசாயிக்கு அறுவடை நேரத்தில் என்ன பலன் கிடைக்குமோ அதை மனதில் கொண்டு அதற்குரிய இழப்பீடுகள் கொடுக்க வேண்டும். தற்போது கிராமங்களில் சேதமடைந்த ஒரு வாழைக்கு ரூ.3, ரூ.7 கொடுக்கப்போகிறார்கள் என்று கூறப்படுகிறது. இப்படி கொடுத்தால் விவசாயிகளை அவமானப்படுத்துவது போலாகும். இதைவிட கொடுக்காமலேயே இருந்துவிட்டுப் போகலாம். கஷ்டப்பட்டு விவசாயம் செய்யும் விவசாயிக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

மீனவர்களின் படகுகள் கடலில் மூழ்கி உள்ளது. வலைகளை இழந்துள்ளனர். அவர்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும். இந்த வி‌ஷயத்தில் அணுகும்போது மனிதாபிமான கண்ணோட்டத்தோடு மீனவர்களாக இருந்தாலும்சரி, விவசாயிகளாக இருந்தாலும் சரி, சாதாரண மக்களாக இருந்தாலும் சரி அணுக வேண்டும்.

புயல் எச்சரிக்கை சின்னங்கள் ஒவ்வொரு மீன்பிடி துறைமுகத்திலும் வைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். மீனவ சகோதரர்களுக்கு ஒன்றை தெரிவித்துக் கொள்கிறேன். ஆத்மார்த்தமாக நாங்கள் வேலை செய்கிறோம். இதில் போலித்தன்மை எதுவும் கிடையாது.

ஈரான் நாட்டில் சிறைபிடிக்கப்பட்ட கடியப்பட்டணத்தைச் சேர்ந்த 4 மீனவ சகோதரர்கள் வந்துள்ளனர். இன்னும் 15 மீனவர்கள் கிஷ் தீவில் படகுகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய உடல் ஆரோக்கியம், சாப்பாடு வசதிகளை செய்து கொடுக்க ஏற்பாடு செய்துள்ளோம்.

இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.


Next Story