அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் தர்ணா போராட்டம்


அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 10 Dec 2017 4:15 AM IST (Updated: 10 Dec 2017 1:23 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் ஊதிய உயர்வு வழங்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் கடந்த 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பணி சுமையை குறைக்க கூடுதல் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். வார விடுமுறை வழங்க வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

தர்ணா போராட்டம்

இந்த நிலையில் நேற்று ஒப்பந்த நிறுவனத்தின் அதிகாரியிடம் ஊதியம் வழங்கக்கோரி ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு அதிகாரி முறையான பதில் அளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஒப்பந்த ஊழியர்கள் மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் சங்க தலைவர் சசிகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் சந்திரமோகன் உள்பட ஊழியர்கள், பாதுகாவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து ஒப்பந்த நிறுவனத்தின் மண்டல மேலாளர் அருண்குமார், ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கோரிக்கைகள் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வு காணப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை ஊழியர்கள் கைவிட்டு பணிக்கு திரும்பினர். ஒப்பந்த ஊழியர்களின் தர்ணா போராட்டத்தினால் மருத்துவ பணிகள் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. 

Next Story