கோவில்களில் பாதுகாப்பு வசதி இல்லாததால் பாதுகாப்பு மையத்துக்கு 19 ஐம்பொன் சிலைகள் எடுத்து செல்லப்பட்டன


கோவில்களில் பாதுகாப்பு வசதி இல்லாததால் பாதுகாப்பு மையத்துக்கு 19 ஐம்பொன் சிலைகள் எடுத்து செல்லப்பட்டன
x
தினத்தந்தி 10 Dec 2017 4:30 AM IST (Updated: 10 Dec 2017 1:31 AM IST)
t-max-icont-min-icon

பாதுகாப்பு வசதி இல்லாத கோவில்களில் இருந்து 19 ஐம்பொன் சிலைகள் கும்பகோணம் பாதுகாப்பு மையத்துக்கு எடுத்துசெல்லப்பட்டன.

திருப்பனந்தாள்,

தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகே நெய்குப்பை கிராமத்தில் சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக ஐம்பொன்னால் ஆன 17 சாமி சிலைகள் உள்ளன. இந்த சிலைகளை பாதுகாக்க கோவிலில் பாதுகாப்பு வசதி இல்லை என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேலிடம், கோவில் அர்ச்சகர் நாகராஜ சிவாச்சாரியார் புகார் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கோவிலுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்த நிலையில் கோவிலில் உள்ள ஐம்பொன் சாமி சிலைகளை கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள சிலை பாதுகாப்பு மையத்துக்கு எடுத்து சென்று பாதுகாக்க அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர்கள் பூமா, ரவி மற்றும் அதிகாரிகள் சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு வந்தனர்.

இதையடுத்து கிராம மக்கள் முன்னிலையில் 17 சிலைகளை அதிகாரிகள் கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள சிலை பாதுகாப்பு மையத்துக்கு எடுத்து சென்றனர். இதேபோல அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில், விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 2 சிலைகள் பாதுகாப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. முன்னதாக சாமி சிலைகளை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 19 சிலைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story