பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதுகலை மருத்துவ மாணவர்கள் 10-வது நாளாக வேலை நிறுத்தம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதுகலை மருத்துவ மாணவர்கள் 10-வது நாளாக வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 10 Dec 2017 4:30 AM IST (Updated: 10 Dec 2017 1:40 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 10-வது நாளாக வேலை நிறுத்தம் செய்த முதுகலை மருத்துவ மாணவர்கள் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 556 டாக்டர்கள் காலிப்பணியிடங்கள் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட்டன. இதற்கான கலந்தாய்வில் தனியார் மருத்துவகல்லூரிகளில் பயின்றவர்களே அழைக்கப்பட்டதாகவும், விதிகளை மீறி காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டிருப்பதாகவும், அரசு மருத்துவகல்லூரிகளில் பயிலும் முதுநிலை மருத்துவ மாணவர்களை கொண்டே முதுநிலை மருத்துவ பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சை மருத்துவகல்லூரியில் பயிலும் முதுகலை மருத்துவ மாணவர்கள் கடந்த 30-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

10-வது நாளாக நேற்று தஞ்சை மருத்துவகல்லூரி முதல்வர் அறை அருகே அமைக்கப்பட்டுள்ள பந்தலில் அமர்ந்து பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு டாக்டர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். இதில் டாக்டர்கள் கோபி, பிரபு மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் முதுகலை மருத்துவ மாணவர்கள் கூறும்போது, அரசு மருத்துவகல்லூரிகளில் நேரடி பணி நியமனம் செய்யக்கூடாது என உள்ள அரசாணை 131-யை பின்பற்றாமல் கலந்தாய்வு நடைபெற்றுள்ளது. 700-க்கும் மேற்பட்ட முதுகலை மருத்துவ மாணவர்கள் படிப்பு முடித்துவிட்டு மக்களுக்கு சேவை செய்ய தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் புறக்கணித்துவிட்டு இதுவரை அரசு பணியில் இல்லாத தனியார் மருத்துவர்களை நியமித்து இருப்பது அரசு சுகாதாரத்துறையை வெகுவாக பாதிக்கும் செயல். இன சூழற்சி, இடஒதுக்கீடு முறையை பின்பற்றி தான் காலிப்பணியிடங்களை நிரப்பப்பட்டுள்ளதாக கூறாமல் கலந்தாய்வு மூலம் பணியமர்த்தப்பட்டுள்ள டாக்டர்களின் பெயர், மருத்துவ கவுன்சில்பதிவு எண், சிறப்பு தகுதி, எந்த பிரிவின் கீழ் இடம் ஒதுக்கப்பட்டது என்பதை பட்டியலாக அரசு இணையதளத்தில் வெளியிட வேண்டும். சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுபடி விதிமுறைகளை பின்பற்றி காலிப்பணியிடங்களை நிரப்பியிருக்க வேண்டும். அரசு டாக்டர்கள், முதுகலை மருத்துவ மாணவர்களின் சேவையை மனதில் கொண்டு அதற்கு மதிப்பளித்து, முறைகேடாக நடந்த கலந்தாய்வை ரத்து செய்துவிட்டு வெளிப்படையாக மறுகலந்தாய்வை நடத்த வேண்டும் என்றனர். 

Next Story