ஒகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேரளாவுக்கு இணையாக தமிழக அரசும் நிவாரண வழங்க வேண்டும்


ஒகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேரளாவுக்கு இணையாக தமிழக அரசும் நிவாரண வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 10 Dec 2017 4:15 AM IST (Updated: 10 Dec 2017 1:53 AM IST)
t-max-icont-min-icon

ஒகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேரளாவுக்கு இணையாக தமிழக அரசும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என ஜெகதாப்பட்டினம் மீனவர்களுக்கு ஆறுதல் கூறிய தமிமுன் அன்சாரி கூறினார்.

கோட்டைப்பட்டினம்,

கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதியில் ஒகி புயல் காரணமாக ஏராளமான மீனவர்கள் இறந்து போனார்கள். இன்னும் பல மீனவர்கள் கரைக்கு திரும்பவில்லை. இந்நிலையில் ஒகி புயல் காரணமாகவும், வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாகவும் கடந்த 2-ந்தேதி (சனிக்கிழமை) முதல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை 9 நாட்கள் புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இதனால் இப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி நேற்று ஜெகதாப்பட்டினத்திற்கு வந்தார். அப்போது அவரை ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். பின்னர் கடலுக்கு செல்லாமல் 9 நாட்களாக வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து, ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மக்களை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூற வேண்டும். கேரளா அரசு அம்மாநிலத்தில் செய்யும் நிவாரண உதவிகளுக்கு இணையாக தமிழக அரசும் செய்ய வேண்டும். சென்னை அண்ணாசாலையில் முஸ்லிம் சமுதாயத்திற்கு சொந்தமான 16 ஏக்கர் இடத்தில், முஸ்லிம் சமுதாயத்தை கலந்து ஆலோசிக்காமல் தமிழக அரசு எந்த கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள கூடாது. கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 9 நாட்களாக கடலுக்கு செல்லாமல் உள்ளனர். இதனால் மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்புக்கு இழப்பீடு தருவது குறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேசுவேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story