கூட்டுறவு சர்க்கரை ஆலை நஷ்டத்துக்கு முறைகேடு தான் காரணம் ஜி.கே.மணி குற்றச்சாட்டு


கூட்டுறவு சர்க்கரை ஆலை நஷ்டத்துக்கு முறைகேடு தான் காரணம் ஜி.கே.மணி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 10 Dec 2017 4:27 AM IST (Updated: 10 Dec 2017 4:27 AM IST)
t-max-icont-min-icon

லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நஷ்டம் அடைவதற்கு ஊழலும், முறைகேடும்தான் காரணம் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி குற்றம்சாட்டினார்.

திருக்கனூர்,

லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை தனியாருக்கு விட புதுவை அரசு முடிவு செய்துள்ளதை கண்டித்து பா.ம.க.வின் உழவர் பேரியக்கம் சார்பில் திருக்கனூர் – கூனிச்சம்பட்டு சந்திப்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பா.ம.க. மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வெங்கடேசன் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். மண்ணாடிப்பட்டு தொகுதி பொறுப்பாளர்கள் அச்சுதன், பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தார். புதுவை மண்டல செயலாளர் சிவா வரவேற்றார்.

பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, புதுவை மாநில அமைப்பாளர் தன்ராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநில தலைவர் ஜி.கே. மணி பேசியதாவது:–

லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை 18 ஆயிரம் பங்குதாரர்களை கொண்டு உருவாக்கப்பட்டது. கூட்டுறவுத்துறை ஆலையை தனியாருக்கு தாரைவார்க்க முதல்–அமைச்சருக்கு உரிமை கிடையாது. ஆலை நஷ்டத்தில் இயங்கினால், அதற்கு தீர்வுகாண அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதை விடுத்து தனியாரிடம் ஒப்படைப்பது என்று கூறுவது கண்டிக்கத்தக்கது.

இந்த ஆலையை தனியாருக்கு கொடுப்பதாக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே, நாராயணசாமி ஒப்பந்தம் செய்துள்ளார். அதன்படி தற்போது செயல்படுகிறார். 18 ஆயிரம் பங்குதாரர்களில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும் ஒருவர். அவரும் இந்த ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்புகிறார். அரசு தனியாருக்கு ஒப்படைப்பதற்கு முன்பாக பங்குதாரர்களின் கருத்தை கேட்டிருக்கவேண்டும். பங்குதாரர்களின் பொதுக்குழுவை கூட்டினால் அதில் டாக்டர் ராமதாஸ் கலந்துகொள்வார்.

ஆலையின் நஷ்டத்துக்கு ஊழலும், முறைகேடும் தான் காரணம். 40 சதவீதம் புதுவை மாநில விவசாயிகளும், 60 சதவீதம் தமிழக விவசாயிகளும் பங்குதாரர்களாக உள்ள இந்த ஆலையை தனியாரிடம் ஒப்படைத்தால், டாக்டர் ராமதாஸ் நேரடியாக விவசாயிகளை ஒன்றுதிரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். சுயநலத்துக்காக ஆலையை தனியாருக்கு விடுவதை பா.ம.க. பார்த்துக்கொண்டு இருக்காது.

நஷ்டத்தில் இருக்கும் ஆலையை தனியார் எடுத்து நடத்தினால் அவர்களுக்கு மட்டும் எப்படி லாபம் கிடைக்கும். தனியாருக்கு லாபம் கிடைக்கும்போது அரசால் ஏன் இதை நடத்த முடியாது. தொழிலாளர்களுக்கு 9 மாதம் சம்பளம் பாக்கி உள்ளது. விவசாயிகள் வெட்டி அனுப்பிய கரும்புக்கு பணம் தரவே இல்லை. விவசாயிகளை புதுவை அரசு பாதுகாக்கவேண்டும். கரும்பு அரவைக்கான ஆயத்த பணியை உடனடியாக தொடங்கவேண்டும். எல்லாவற்றையும் குத்தகைக்கு விடும் இந்த அரசு, இந்த ஆட்சியையும் பா.ம.க.வுக்கு குத்தகைக்கு விட்டால் நாங்கள் சிறப்பாக ஆட்சியை நடத்திக்காட்டுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் புதுவை, தமிழகத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கையில் கரும்புகளுடன் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக கோ‌ஷமிட்டனர். முடிவில் புதுச்சேரி மாநில உழவர் பேரியக்க செயலாளர் பச்சைமுத்து நன்றி கூறினார்.


Next Story