நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை குத்திக்கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை குத்திக்கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து பால்கர் செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
மும்பை,
பால்கர் மாவட்டம் பட்கா கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் மோரே(வயது40). இவரது மனைவி ஆஷா. ஆஷாவின் நடத்தையில் ரமேஷ் மோரேவுக்கு சந்தேகம் இருந்து வந்தது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.
கடந்த 2012–ம் ஆண்டு வீட்டில் இருந்து ஆஷா வெளியே சென்றபோது, ரமேஷ் மோரே அவரை பின்தொடர்ந்து சென்று கண்காணித்தார்.
திடீரென அவர் தன்னிடம் இருந்த கத்தியால் மனைவியை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில், படுகாயம் அடைந்த ஆஷா பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ரமேஷ் மோரேவை கைது செய்து, பால்கர் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது அவர் மீதான கொலைக் குற்றச்சாட்டு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது குற்றவாளி ரமேஷ் மோரேவுக்கு நீதிபதி ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.