அனுமதியின்றி ஜல்லிக்கட்டுக்கு பயிற்சி; 3 பேரிடம் போலீசார் விசாரணை


அனுமதியின்றி ஜல்லிக்கட்டுக்கு பயிற்சி; 3 பேரிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 11 Dec 2017 3:45 AM IST (Updated: 11 Dec 2017 3:09 AM IST)
t-max-icont-min-icon

திருவெறும்பூர் அருகே அனுமதியின்றி ஜல்லிக் கட்டுக்கான பயிற்சி நடத்தப்பட்டது தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவெறும்பூர்,

பொங்கல் பண்டிகையை தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். இதையொட்டி ஒரு மாதத்திற்கு முன்பாகவே தங்கள் ஜல்லிக்கட்டு காளைகளை தயார் செய்யும் பணியில் திருவெறும்பூர் தாலுகா பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். தாங்கள் வளர்க்கும் காளைகளுக்கு நீச்சல் பயிற்சி, சீறிப்பாயும் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.

மேலும் சூரியூர், கூத்தைப்பார், நவல்பட்டு, துவாக்குடி, வேங்கூர், நடராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அரசின் முறையான அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திட வேண்டிய வேலைகளில் மேற்கண்ட கிராம பொதுமக்கள் குழுக்கள் அமைத்து பணியாற்றி வருகின்றனர்.

3 பேரிடம் விசாரணை

இந்நிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட குண்டூர் திருவளர்ச்சிபட்டியில் நேற்று ஜல்லிக்கட்டுக்கு பயிற்சி நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது, வாடிவாசல் அமைக்கப்படாத பொதுமந்தையில் ஜல்லிக்கட்டு காளைகளை வைத்து அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட பயிற்சியை தடுத்து நிறுத்தினர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த 3 பேரை நவல்பட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story