மத்திய, மாநில அரசுகள் விவசாயிகள் பிரச்சினைகளை கண்டுகொள்வதில்லை அன்னா ஹசாரே குற்றச்சாட்டு


மத்திய, மாநில அரசுகள் விவசாயிகள் பிரச்சினைகளை கண்டுகொள்வதில்லை அன்னா ஹசாரே குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 11 Dec 2017 4:45 AM IST (Updated: 11 Dec 2017 3:19 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் பிரச்சினைகளை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்வதில்லை என அன்னா ஹசாரே கூறினார்.

மதுரை,

மதுரை நாகமலைபுதுக்கோட்டையில் உள்ள பில்லர் மையத்தில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நேற்று காலை நடைபெற்றது. இந்தியாவின் தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தங்கபாலு வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் பேசும்போது, “இந்தியா சந்தித்துள்ள மிகப்பெரிய பிரச்சினையாக தண்ணீர் பிரச்சினை இருக்கிறது. இதனை உடனடியாக சரி செய்யவேண்டும். 4 சதவீத தண்ணீரை மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம். மீதமுள்ள 96 சதவீத தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும். ஆனால் அந்த தண்ணீர் விவசாயத்தை தவிர தொழிற்சாலைகளுக்கே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தண்ணீரை முதலில் குடிப்பதற்கும், இரண்டாவதாக விவசாயத்திற்கும், அதன்பிறகே தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்த வேண்டும். மக்களுக்கு தேவையான தண்ணீரை பெற்று தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார்.

இதனை தொடர்ந்து காந்திய தலைவர் அன்னா ஹசாரே பேசும்போது கூறியதாவது:-

நாடு வளம் பெற வேண்டும் என்றால், ஒரு கிராமம் வளம் பெற்றிருக்க வேண்டும். கிராமம் வளம் பெறுவதற்கு அங்குள்ள விவசாயிகள் வளம் பெற்றிருக்க வேண்டும். எனவே விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை நாம் பாதுகாத்து சேமித்து வைத்து கொள்ள வேண்டும். ஏராளமான இளைஞர்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். வேலை வாய்ப்பையும், விவசாயத்தையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அவ்வாறு ஒப்பிட்டு பார்த்தால் இளைஞர்களுக்கு எளிதாக வேலை வாய்ப்பினை வழங்க முடியும்.

விவசாயத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயம் செழித்தால் அரசுக்கு லாபம் கிடைக்கும். கடந்த தேர்தல்களில் உங்களின் ஆதரவு யாருக்கு என்று பலர் என்னிடம் கேட்டனர். விவசாயிகளை பற்றி சிந்திப்பவர்களுக்கு தான் ஆதரவு அளிப்பேன் என்று கூறினேன். அப்போது கூறியதை தான் இப்போதும் கூறுகிறேன். விவசாயிகள் பற்றி சிந்திக்கும் தலைவர்களுக்கு தான் என் ஆதரவு. பிரதமர் நரேந்திர மோடி, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் விவசாயிகளை பற்றி கவலைப்படுவதில்லை. அவர்கள் தொழிற்சாலைகளுக்கு, தொழில் அதிபர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

கடந்த 25 ஆண்டுகளில் 12 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். விவசாயிகளுக்கு கடன் வழங்க வங்கிகள் முன்வர வேண்டும். விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கான விலையை அவர்களே நிர்ணயம் செய்யும் நிலை வருதல் அவசியம்.

விவசாயிகள் எப்படி போராடினாலும் அவர்களின் வாழ்வாதார பிரச்சினைகளை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்வதில்லை. வரும் காலங்களில் ஆட்சி கவிழும் வகையில் விவசாயிகள் போராட்டம் நடத்த வேண்டும். அப்போது தான் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். விவசாயிகளின் பல்வேறு பிரச்சினைகளுக்காக மார்ச் மாதம் 23-ந்தேதி டெல்லியில் போராட்டம் நடக்கிறது. இதில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் ஆறுகள் வளம் மீட்பு மற்றும் வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் வைகை பாதுகாப்பு கருத்தரங்கம் மதுரை மடீட்சியா அரங்கில் நடந்தது. இதில் அன்னா ஹாசரே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நதிகள், காடுகள், நீர்வளத்தை பாதுகாப்பதற்காக தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால் இதற்கு ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. இருந்தாலும் போராட்டத்தை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறோம். எனக்கு கிடைத்த விருதுகள் மூலம் கிடைத்த பரிசுகளை வைத்து தொடர்ந்து சேவை செய்து வருகிறேன். லஞ்சத்தை எதிர்த்து போராடி வருகிறேன். நான் எந்த கட்சியையும் தொடங்கவில்லை. யாருடைய கட்சியிலும் நான் இல்லை. அறவழி போராட்டத்தை யாரும் தடுக்க முடியாது. மக்கள் தான் முதலாளிகள். ஆனால் மக்களை அரசியல்வாதிகள் அடிமைகளாக மாற்றி இருக்கிறார்கள். மக்கள் விழிப்புடன் இருந்தால் தான் நாட்டை காப்பாற்ற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story