லாட்டரி விற்பனை செய்ததாக 3 பேர் கைது
புதுவையில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி,
புதுவை வடக்கு பகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி மற்றும் 3 நம்பர் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரக்சனாசிங் உத்தரவின்பேரில் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்–இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே சொக்கநாதன்பேட்டையில் உள்ள ஒரு பேன்சி ஸ்டோரில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் லாட்டரி விற்பனை நடைபெறுவதை உறுதி செய்தனர்.
இதைத்தொடர்ந்து லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக குருமாம்பேட்டை சேர்ந்த ரமேஷ் (வயது 43) என்பவரை கைது செய்தனர். இதேபோல் வழுதாவூர் ரோட்டில் லாட்டரிசீட்டுகள் விற்றதாக முத்திரையர்பாளையத்தை சேர்ந்த மாரியப்பன் (வயது 42) ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் முத்திரையர்பாளையத்தை சேர்ந்த கார்த்திக் (36) என்பவர்தான் இந்த லாட்டரி விற்பனையில் முக்கிய பங்கு வகிப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கார்த்திக்கையும் போலீசார் கைது செய்தனர். கைதான 3 பேரிடமிருந்தும் ஒட்டுமொத்தமாக ரூ.16 ஆயிரத்து 490 ரொக்கம் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.