கிராம பகுதியில் ‘டாஸ்மாக்’ கடை திறக்க எதிர்ப்பு; பொதுமக்கள் திடீர் சாலைமறியல்


கிராம பகுதியில் ‘டாஸ்மாக்’ கடை திறக்க எதிர்ப்பு; பொதுமக்கள் திடீர் சாலைமறியல்
x
தினத்தந்தி 11 Dec 2017 10:45 PM GMT (Updated: 11 Dec 2017 9:46 PM GMT)

சேலம் அருகே கிராம பகுதியில் ‘டாஸ்மாக்‘ கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்,

சேலம் அருகே வீராணம் மெயின் ரோட்டில் அரசின் டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு சின்னனூர் கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சசிக்குமார் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து கிராம மக்கள் இறந்தவர் சடலத்துடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுக்கடையால்தான் பிரச்சினை வருகிறது, ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்து வருவதாக கூறி அங்குள்ள டாஸ்மாக் கடையை மூடுவதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த போராட்டம் காரணமாக டாஸ்மாக் அதிகாரிகள் அங்கிருந்த மதுக்கடையை மூடி விட்டனர். இந்த நிலையில் மூடப்பட்ட கடைக்கு பதிலாக சின்னனூர் மற்றும் தைலானூர் பகுதியில் மதுக்கடை திறப்பதற்கு அரசு அதிகாரிகள் முயற்சித்து வருவதாக கிராம மக்களுக்கு தகவல் கிடைத்தது.

இதையறிந்த சின்னனூர் மற்றும் தைலானூர் கிராமத்தை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை வீராணம் மெயின் ரோட்டில் திரண்டனர். சின்னனூர், தைலானூர் கிராமத்தில் டாஸ்மாக் கடையை புதிதாக திறக்க அனுமதிக்கமாட்டோம் என்று கூறி ஆவேசமாக கோஷம் எழுப்பினார்கள்.

இந்த மறியல் போராட்டத்தில் பெண்கள் திரளாக கைக்குழந்தைகளுடன் பங்கேற்றிருந்தனர். ‘வேண்டாம்...வேண்டாம்.. டாஸ்மாக் கடை வேண்டாம், திறக்காதே..திறக்காதே டாஸ்மாக் கடையை திறக்காதே..’ என்பன போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. வீராணம் மெயின் ரோட்டில் நடந்த மறியல் போராட்டம் காரணமாக, சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சேலம் மாநகர போலீஸ் உதவி கமிஷனர் ராமசாமி, அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். அவர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், “ஏற்கனவே அடிதடி, கத்திக்குத்து, கொலை நடைபெற்ற அதிருப்தியில் உள்ள நிலையில் அரசு மதுபானக்கடையை இப்பகுதியில் திறக்க இருப்பது வேதனை அளிக்கிறது. மேலும் எங்களது கிராமத்தில் டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பெண்கள் அதிக அளவில் இந்த பயிற்சி வகுப்புக்கு வருகிறார்கள். இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால் பெரும் பாதிப்பு ஏற்படும்“ என்றனர்.

அதைத்தொடர்ந்து போலீஸ் உதவி கமிஷனர் ராமசாமி பொதுமக்களுக்கு ஒரு உறுதி அளித்தார். அதாவது, அரசு டாஸ்மாக் அதிகாரிகளுக்கு இந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என நாங்களே ஒரு கடிதம் எழுதி அனுப்பி வைக்கிறோம் என்றனர். அதை ஏற்று அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

Next Story