“தமிழக கனிம வள சட்ட விதிமுறைகள் இறக்குமதி செய்த மணலுக்கு பொருந்தாது” ஐகோர்ட்டில் தனியார் நிறுவனங்கள் வாதம்


“தமிழக கனிம வள சட்ட விதிமுறைகள் இறக்குமதி செய்த மணலுக்கு பொருந்தாது” ஐகோர்ட்டில் தனியார் நிறுவனங்கள் வாதம்
x
தினத்தந்தி 12 Dec 2017 4:15 AM IST (Updated: 12 Dec 2017 3:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழக கனிம வள சட்ட விதிமுறைகள் இறக்குமதி செய்யப்பட்ட மணலுக்கு பொருந்தாது என்று மதுரை ஐகோர்ட்டில் தனியார் நிறுவனங்கள் சார்பில் வாதிடப்பட்டது.

மதுரை,

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலைச் சேர்ந்த ராமையா எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் ராமையா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில், மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்த மணல் தூத்துக்குடி துறைமுகத்தில் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அந்த மணலை விற்பனைக்கு கொண்டு செல்ல அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், இறக்குமதி செய்த மணலை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகள் அனைத்தையும் 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என்றும் கடந்த 29-ந்தேதி உத்தரவு பிறப்பித்தார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்கள் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள மணலை ராமையா எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.8 கோடியே 20 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளதாகவும், மணலை வெளியில் எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கில் தன்னை எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும் என்றும் நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த மரியஆண்டனி தாக்கல் செய்த மனுவும் இந்த வழக்குடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், கிருஷ்ணவள்ளி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

புதுக்கோட்டை ராமையா இறக்குமதி நிறுவனம் சார்பிலும், பாளையங்கோட்டை மரியஆண்டனி சார்பிலும் வக்கீல்கள் வாதாடினார்கள். அப்போது அவர்கள், “இறக்குமதி செய்யப்பட்ட மணலை துறைமுகத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவிட்டும் அதற்கு தூத்துக்குடி துறைமுகம் மறுக்கிறது. மேலும் துறைமுகத்திற்கு ரூ.1 கோடியே 40 லட்சம் செலுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். தினந்தோறும் ரூ.5 லட்சம் வரை நஷ்டம் ஏற்படுகிறது. தமிழகத்தின் இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காகவும், ஆற்றுப்படுகைகளில் மணல் எடுப்பதால் தமிழக விவசாயிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பதற்காகவும் தான் மணல் குவாரிகளை மூட உத்தரவு பிறப்பிப்பதாக தனிநீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

மேலும், தமிழக கனிம வள சட்ட விதிமுறைகள் இறக்குமதி செய்யப்பட்ட மணலுக்கு பொருந்தாது. மத்திய அரசின் அனுமதி பெற்று இறக்குமதி செய்யப்படும் பொருட்களை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். எனவே துறைமுகத்தில் உள்ள மணலை வெளியில் கொண்டு செல்ல அனுமதிக்க உத்தரவிட வேண்டும்“ என்று அந்த நிறுவனங்களின் வக்கீல்கள் வாதாடினர்.

பின்னர் மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, “மத்திய சுங்கத்துறையின் அனுமதி பெற்றுத்தான் தனியார் நிறுவனத்திற்கு மணல் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளுக்கு மட்டுமே மலேசியாவில் இருந்து மணலை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது“ என்றார்.

முடிவில், இதுகுறித்து தமிழக அரசு சார்பில் தரப்பில் பதில் அளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை நாளைக்கு (அதாவது 13-ந்தேதி) ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story