நெரிஞ்சிப்பேட்டை கதவணையில் உடைந்த ஷட்டர்களை சீரமைக்கும் பணி தீவிரம்


நெரிஞ்சிப்பேட்டை கதவணையில் உடைந்த ஷட்டர்களை சீரமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 12 Dec 2017 4:15 AM IST (Updated: 12 Dec 2017 3:16 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை கதவணையில் உடைந்த ஷட்டர்களை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

எடப்பாடி,

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீர் பல பகுதிகளில் தேக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதற்காக சேலம் மாவட்டம் செக்கானூரில் முதல் கதவணையும், எடப்பாடி அருகே நெரிஞ்சிப்பேட்டையில் 2-வது கதவணையும் உள்ளது.இந்த கதவணையில் சுமார் 30 அடிக்கு தண்ணீர் தேக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. 2 எந்திரங்கள் மூலம் தலா 15 மெகாவாட் மின்சாரம் தயார் ஆகிறது.

இந்த கதவணை மின்நிலையத்தில் 13-வது மதகு 1-ந் தேதி அன்றும், 8-ந் தேதி அன்று 7-வது மதகும் உடைந்து தேக்கி வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் வீணாக வெளியேறியது. இதை குறைக்க மின்சாரம் தயாரிக்கும் மதகு மூலமாக 1,500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் மின்உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. கதவணையில் இருந்து தண்ணீர் வெளியேறியதால், பூலாம்பட்டி-நெரிஞ்சிப்பேட்டை இடையே நடைபெற்று வந்த விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டு சிறுவிசைப்படகு போக்குவரத்து மட்டும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 7-வது மதகில் உடைந்த ஷட்டரை மேலே தூக்கிவிட்டு தற்காலிக ஷட்டர் அமைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நேற்று மின்சார வாரிய ஊழியர்கள் மற்ற மதகுகளில் ஏதேனும் உடைப்பு, அரிப்பு ஏற்பட்டுள்ளதா? என சோதனை செய்து சீரமைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.


Next Story