நெல்லையில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்
நெல்லையில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கான 3–வது ஊதிய மாற்றத்தை உடனே அமல்படுத்தவேண்டும். பி.எஸ்.என்.எல். கோபுரங்களை தனியாருக்கு வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அனைத்து தொழிற்சங்கம் மற்றும் கூட்டமைப்பினர் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் பணியாற்றும் 800–க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று வேலைக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பி.எஸ்.என்.எல். அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. பணிகளும் பாதிக்கப்பட்டன. பழுதான போன்களை சரி செய்ய ஊழியர்கள் வராததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் டெலிபோன் கட்டணம், செல்போன் கட்டணம் செலுத்த முடியாமலும் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
இந்தநிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் நேற்று நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள பொதுமேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க நிர்வாகிகள் சூசை மரியஅந்தோணி, கணேசன் ஆகியோர் தலைமை தாங்கி போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் போட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சங்க நிர்வாகிகள் கோமதிசங்கர், ஜெயராமன், விஜயமணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.