புளியங்குடியில் 43 லட்சம் பழைய ரூபாய் நோட்டுகளுடன் 3 பேர் கைது


புளியங்குடியில் 43 லட்சம் பழைய ரூபாய் நோட்டுகளுடன் 3 பேர் கைது
x
தினத்தந்தி 13 Dec 2017 4:30 AM IST (Updated: 12 Dec 2017 11:20 PM IST)
t-max-icont-min-icon

புளியங்குடியில் 43 லட்சம் பழைய ரூபாய் நோட்டுகளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புளியங்குடி,

நெல்லை மாவட்டம் புளியங்குடி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சத்ருகன் மற்றும் போலீசார் பஸ் நிலைய பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக 3 பேர் நின்றனர்.

அவர்களில் ஒருவர் கையில் ஒரு பை இருந்தது. அந்த பையில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. உடனே போலீசார் 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:–

3 பேரில் 2 பேர், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அதாவது திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த சஜீவன் (வயது 41). கொல்லத்தைச் சேர்ந்த சிவகுமாரபிள்ளை (54) என்பது தெரிய வந்தது. இன்னொருவர் புளியங்குடி சிந்தாமணி மேல மறக்குடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் முருகன் (33) என்பதும் தெரிய வந்தது.

முருகன் கேரளாவில் உள்ள ஒரு சிப்ஸ் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். அப்போது, சஜீவன், சிவகுமாரபிள்ளை ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சஜீவன், சிவகுமாரபிள்ளை ஆகியோரிடம் பழைய ரூபாய் நோட்டுகள் இருந்ததாக தெரிகிறது. இந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி தருவதாக கூறி இருவரையும் முருகன், புளியங்குடிக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது அவர்கள் 3 பேரும் புளியங்குடி பஸ் நிலையத்தில் நின்ற போது போலீசாரிடம் சிக்கினர்.

அவர்களிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகள் இருந்த பை கைப்பற்றப்பட்டது. அந்த பையில் 43 லட்சம் பழைய ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் வழக்குப்பதிவு செய்து முருகன் உள்பட 3 பேரை கைது செய்து பழைய ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.


Next Story