சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைத்துள்ளது தீர்ப்பு குறித்து கவுசல்யா பரபரப்பு பேட்டி


சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைத்துள்ளது தீர்ப்பு குறித்து கவுசல்யா பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 12 Dec 2017 11:15 PM GMT (Updated: 2017-12-13T04:30:22+05:30)

சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைத்துள்ளது என்று நீதிமன்ற தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்துள்ள கவுசல்யா, வழக்கில் விடுவிக்கப்பட்டுள்ள 3 பேரின் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்,

என் கணவர் சங்கர் சிந்திய ரத்தத்திற்கு உரிய நீதிக்காக 1¾ ஆண்டுகள் காத்துக்கிடந்தேன். அந்த வகையில் இன்று (நேற்று) நீதி கிடைத்துள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். இது நீதித்துறையின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. முதன்மையாக கொலை வழக்குகளில் தீர்ப்பு வருகிற வரைக்கும் நீதிமன்ற காவலிலேயே குற்றவாளிகளை வைத்திருந்தது அரிதிலும் அரிது. அந்த வகையில் என் வழக்கை தனித்துவத்தோடும் சாதீய பின்புலத்தோடும் நீதித்துறை அணுகியுள்ளதாகவே நான் கருதுகிறேன். இதுவும், இனிவரும் சாதீய, கவுரவ கொலைகள் வழக்குகளுக்கு நல்ல முன் உதாரணமாக அமையும் என நம்புகிறேன். அதிலும் அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை பெரும்பாலான குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தூக்கு தண்டனை குறித்த என் கருத்து வேறாக இருந்தாலும், சாதி வெறியர்களுக்கு இனிமேல் கவுரவ கொலைகள் செய்ய மனத்தடைகளையும், அச்சத்தையும் ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த தீர்ப்பு மிக முக்கியமானது. இப்படிப்பட்ட வழக்குகளில் என் வழக்கிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு இந்தியாவிலேயே முதல்முறை என்கிற வகையில் எங்கள் காத்திருப்பு வீண்போகவில்லை. அதிலும் குறிப்பாக இரட்டை தூக்கு, இரட்டை ஆயுள் போன்ற தண்டனைகள் குற்றவாளிகளை எந்த வகையிலும் தப்பிக்க இடமளிக்க கூடாது என்பதையே காட்டுகிறது. இப்படி எல்லா வகையிலும் இந்த தீர்ப்பை வரவேற்கிறேன்.

எனது கணவர் சங்கர் கொலை வழக்கில் முக்கியமானவர்களான அன்னலட்சுமி, பாண்டித்துரை மற்றும் பிரசன்னா ஆகியோருக்கு விடுதலை வழங்கியிருப்பதை பொருத்தவரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன். அவர்களுக்கும் உரிய தண்டனை கிடைக்கும் வரை என் சட்டப்போராட்டம் தொடரும். தண்டனை கிடைக்கப்பெற்றவர்கள் அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்தால், அதனை எதிர்த்தும் உறுதியோடு நீதிமன்றத்தில் வழக்காடுவேன். இந்த போராட்டத்தில் ஒரு போதும் சலிக்கமாட்டேன். பொதுவாக நீதித்துறையின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அதே நம்பிக்கையோடு இந்த வழக்கை குறிப்பாக இந்த 3 பேரின் விடுதலையை எதிர்த்து இறுதிவரை சட்டப்படியான போராட்டத்தை நடத்துவேன். சட்டப்போராட்டத்திலும், களப்போராட்டத்திலும் ஒரு போதும் ஓயமாட்டேன்.

ஏனென்றால் சங்கருக்கு உரிய நீதி இந்த வழக்கு தீர்ப்பில் மட்டும் அடங்கியிருக்கவில்லை. சாதீய, கவுரவ கொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம் படைப்பது தான் சங்கருக்கு உரிய நீதியாக நான் கருதுகிறேன். அதற்கு இந்த தீர்ப்பு துணை செய்யும் என்றும் நம்புகிறேன். தீர்ப்பு வழங்கப்பட்ட இன்று (நேற்று) நீதிமன்ற வளாகத்திலேயே அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. 3 பேரின் விடுதலையை கவனத்தில் கொண்டு எனக்கும், சங்கர் குடும்பத்தினருக்கும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சுகிறேன். அதன் அடிப்படையில் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டுகிறேன். சங்கர் கொலை வழக்கு தீர்ப்பிற்கு இதுநாள் வரை உறுதுணையாக இருந்த அரசியல் கட்சிகளுக்கும், போராட்ட இயக்கங்களுக்கும், மனித உரிமை செயல்பாட்டாளர்களுக்கும், ஊடகத்தினருக்கும், பத்திரிகைகளுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு கவுசல்யா கூறினார். 

Next Story