ஆணவ கொலை வழக்கில் இந்தியாவில் முதல் முறையாக 6 பேருக்கு தூக்கு தண்டனை வக்கீல் பேட்டி


ஆணவ கொலை வழக்கில் இந்தியாவில் முதல் முறையாக 6 பேருக்கு தூக்கு தண்டனை வக்கீல் பேட்டி
x
தினத்தந்தி 13 Dec 2017 4:45 AM IST (Updated: 13 Dec 2017 4:38 AM IST)
t-max-icont-min-icon

ஆணவ கொலை வழக்கில் இந்தியாவில் முதல் முறையாக 6 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று அரசு சிறப்பு வக்கீல் சங்கர நாராயணன் கூறினார்.

திருப்பூர்,

உடுமலை சங்கர் சாதி ஆணவ கொலை வழக்கில் அரசு தரப்பில், அரசு சிறப்பு வக்கீல் சங்கரநாராயணன் தலைமையில் கூடுதல் அரசு வக்கீல் செந்தில்குமார், குற்ற வழக்கு தொடர்வு துறை உதவி இயக்குனர் ராஜசேகரன், சிறப்பு அரசு வக்கீல் ரூபன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனை, ஒருவருக்கு ஆயுள் தண்டனை, ஒருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

தீர்ப்பு குறித்து அரசு சிறப்பு வக்கீல் சங்கரநாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சாதி ஆணவ கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது இந்தியாவிலேயே இது முதல் தீர்ப்பாகும். ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர் கொலை செய்யப்பட்டாலும், தனியாக இருப்பவரை கொலை செய்தாலும், யாரும் உதவிக்கு இல்லாத நிலையில் ஒருவர் கொலை செய்யப்பட்டாலும், கூலிப்படையை ஏவி ஒருவர் கொலை செய்யப்பட்டாலும் அதுபோன்ற வழக்கில் தூக்குத்தண்டனை விதித்து ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட 4 சம்பவங்களும் உடுமலை சங்கர் கொலை வழக்கில் பொருந்துகிறது. அந்த விவாதத்தை அரசு தரப்பில் இருந்து நாங்கள் முன் வைத்தோம்.

இந்த வழக்கில் 121 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். 33 தடயங்களை தாக்கல் செய்தோம். 67 பேர் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். கொலை சம்பவம் நடந்த இடத்தில் இருந்த பொதுமக்கள், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என அனைவரும் சமுதாய பொறுப்பை உணர்ந்து தெளிவான சாட்சியத்தை கோர்ட்டில் அளித்தார்கள். ஒருவர் மட்டும் பிரள் சாட்சியம் அளித்தார். இந்த வழக்கில் உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் மற்றும் போலீசார் சிறப்பாக செயல்பட்டு சம்பவம் நடந்த 60 நாளில் குற்றப்பத்தி ரிகையை கோர்ட்டில் சமர்ப்பித்தனர். சிறப்பான தீர்ப்பை கோர்ட்டு வழங்கியுள்ளது. இதற்கு கோர்ட்டுக்கும், தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் குற்றம்சாட்டப்பட்டதால் 3 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அரசின் அனுமதியை பெற்று மேல் முறையீடு மேற்கொள்ளப் படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story