ஊதிய உயர்வு கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலைநிறுத்தம்


ஊதிய உயர்வு கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 12 Dec 2017 11:34 PM GMT (Updated: 2017-12-13T05:04:16+05:30)

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தை தொடங் கினர். இந்த போராட்டத்தில் கோவை மாவட்டத்தில் 1,300 பேர் பங்கேற்று உள்ளனர்.

கோவை,

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் இணைந்து 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து உள்ளது. இதன்படி கோவை மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலைக்கு செல்லவில்லை. இதன் காரணமாக வாடிக்கையாளர் மையம் மற்றும் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தலைமை பி.எஸ்.என்.எல். அலுவலக நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசியதாவது:-

ஊதிய உயர்வு

பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். பி.எஸ்.என்.எல். நிறுவனம் நஷ்டத்தை சந்தித்து வருவதால் ஊதிய உயர்வு வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதற்கு மத்திய அரசின் செயல்பாடுதான் காரணம். ஊழியர்கள் இல்லை.

தனியார்மயமாக்கும் முயற்சி

தற்போது நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் சார்பில் நிறுவப்பட்டுள்ள சுமார் 1 லட்சம் டவர்களை பிரித்து தனியாக துணை நிறுவனம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இது பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை தனியார் மயமாக்கும் முயற்சியாகும். இதனை மத்திய அரசு கைவிட வேண்டும். தற்போது தொடங்கி உள்ள இந்த வேலை நிறுத்தத்தில் கோவை மாவட்டத்தில் 1,300 பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் 900 ஒப்பந்த பணியாளர்களும் அடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தை சேர்ந்த பிரசன்னா, சுப்பராயன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங் கள் எழுப்பினர். 

Next Story