பி.எஸ்.என்.எல்.ஊழியர்கள் 2–வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்


பி.எஸ்.என்.எல்.ஊழியர்கள் 2–வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 13 Dec 2017 10:45 PM GMT (Updated: 2017-12-14T00:03:50+05:30)

பி.எஸ்.என்.எல்.ஊழியர்கள் 2–வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.

திருச்சி,

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஊதியம் மாற்றம் வழங்க வேண்டும். சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். பணி பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும். குறைந்த பட்ச மாத சம்பளம் ரூ.18 ஆயிரம் என நிர்ணயிக்க வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்த ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். துணை டவர் நிறுவனம் உருவாக்க கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று முன்தினம் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். அதன்படி திருச்சியிலும் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து திருச்சி பி.எஸ்.என்.எல். அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் நேற்று 2–வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. அதன்படி ஊழியர்கள், அதிகாரிகள் யாரும் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் பங்கேற்றனர். நேற்று 2–வது நாளாக அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பொது மேலாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். இதில் பலர் கலந்து கொண்டனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் செல்போன், தொலை பேசி சேவையில் எந்த பாதிப்பும் இல்லை. வாடிக்கையாளர் சேவை மையம் இயங்கவில்லை. அதே போன்று தொலை பேசி, செல்போனுக்கு பில் கட்டும் பணிகள் பாதிப்படைந்தது.


Next Story