காந்திமார்க்கெட் அருகே 2–வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம் அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்


காந்திமார்க்கெட் அருகே 2–வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம் அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 14 Dec 2017 4:30 AM IST (Updated: 14 Dec 2017 12:03 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி–தஞ்சை சாலையில் காந்திமார்க்கெட் அருகே 2–வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதனால் அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி,

திருச்சி மாநகரின் மையப்பகுதியில் பாலக்கரை மற்றும் காந்திமார்க்கெட் பகுதிகள் உள்ளன. இந்த பகுதியில் ஏராளமான கடைகள், வணிக வளாகங்கள் உள்ளன. இங்குள்ள கடைகளின் முன்பு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு இருப்பதால் அங்கு தினமும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கும், மாநகராட்சிக்கும் பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் நேற்று முன்தினம் பாலக்கரை முதல் காந்திமார்க்கெட் வரை கடைகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

இந்தநிலையில் 2–வது நாளாக நேற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றது. திருச்சி–தஞ்சை சாலையில் காந்திமார்க்கெட் அருகே கடைகளின் முன்பு இருந்த கீற்று கொட்டகை, தகர கொட்டகை, பெட்டிகள் உள்ளிட்டவைகளை பொக்ளின் எந்திரத்தின் உதவியுடன் அகற்றினார்கள். மேலும், கடைகளின் முன்பு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அமைக்கப்பட்டு இருந்த சிமெண்டு தளத்தையும் பொக்ளின் எந்திரம் மூலம் பெயர்த்து அப்புறப்படுத்தினார்கள்.

இதற்கு ஒரு சில கடை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, “நாங்கள் முறைப்படி மாநகராட்சிக்கு வரி செலுத்துகிறோம். முன்னறிவிப்பு இன்றி இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது“ என்று கூறி வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்த போலீசார் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார்கள். தொடர்ந்து காந்திமார்க்கெட்டில் இருந்து அரியமங்கலம் பால்பண்ணை வரை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.


Next Story