3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அதிகாரிகள்–ஊழியர்கள் 2–வது நாளாக வேலை நிறுத்தம்


3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அதிகாரிகள்–ஊழியர்கள் 2–வது நாளாக வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 13 Dec 2017 9:30 PM GMT (Updated: 13 Dec 2017 7:15 PM GMT)

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 2–வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு,

பி.எஸ்.என்.எல். பணியாளர்களுக்கு 1–1–2017 முதல் 3–வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். 2–வது ஊதிய குழுவில் விடுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். துணை கோபுர நிறுவனம் உருவாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் ஆகிய 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.

பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் 2–வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இதனால் ஈரோடு பிரப்ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம், காந்திஜிரோட்டில் உள்ள பொது மேலாளர் அலுவலகம் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகங்களில் அதிகாரிகள் பணிக்கு செல்லவில்லை. இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

வாடிக்கையாளர் சேவை மையங்கள் பூட்டப்பட்டு கிடந்ததால் கட்டணம் செலுத்த வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக தொலைத்தொடர்பு குறித்த புகார்கள் சரிசெய்யப்படவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு காந்திஜிரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.


Next Story