விழுப்புரம் அருகே 7 வயது சிறுவனை கொன்று ஆற்றில் உடல் புதைப்பு தாயின் 2–வது கணவர் கைது


விழுப்புரம் அருகே 7 வயது சிறுவனை கொன்று ஆற்றில் உடல் புதைப்பு தாயின் 2–வது கணவர் கைது
x
தினத்தந்தி 13 Dec 2017 10:00 PM GMT (Updated: 2017-12-14T01:07:52+05:30)

விழுப்புரம் அருகே 7 வயது சிறுவனை அடித்துக் கொன்று ஆற்றில் உடல் புதைக்கப்பட்டது. இது தொடர்பாக தாயின் 2–வது கணவர் கைது செய்யப்பட்டார்.

அரசூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.எடையார் காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பால்சாமி(வயது 27). இவர் பெங்களூருவுக்கு சென்று அங்குள்ள ஒரு கடையில் கூலி வேலை செய்து வந்தார்.

அப்போது இவருக்கும், அதே கடையில் வேலை பார்த்து வந்த பெங்களூரு ஆர்.எம்.சி. பஜார் யஸ்வந்த்புரம் பகுதியை சேர்ந்த ரத்தினம்மாள்(26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ரத்தினம்மாள் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து, அப்பு என்ற கைக்குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். இதனால் அவருக்கு ஆறுதல் கூறிய பால்சாமி, ரத்தினம்மாளுடன் நெருங்கி பழகினார்.

இதையடுத்து கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ரத்தினம்மாளும், பால்சாமியும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின்னர் அதே பகுதியில் இவர்கள் குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு திவக்(5) என்ற மகனும் சாரா(3) என்ற மகளும் உள்ளனர். தற்போது 7 வயது சிறுவனான அப்பு அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் 2–ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில் பால்சாமி பெங்களூருவில் இருந்து அப்புவை மட்டும் அழைத்துக்கொண்டு சொந்த ஊரான டி.எடையார் காலனிக்கு வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து காலையில் பால்சாமி, அப்புவை அழைத்துக்கொண்டு அதே பகுதியில் உள்ள மலட்டாறுக்கு குளிக்க சென்றுள்ளார். பின்னர் மாலை 4 மணிக்கு பால்சாமி மட்டும் தனது வீட்டிற்கு வந்தார். அவர் வீட்டின் முன்பகுதியில் அமர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளார். இதை பார்த்த பால்சாமியின் பெற்றோர், அவரிடம் எதற்காக அழுகிறாய், அப்பு எங்கே என்று கேட்டுள்ளனர்.

அதற்கு பால்சாமி, அப்புவை கல்லால் அடித்துக்கொன்று ஆற்று மணலில் புதைத்து விட்டதாக கூறியுள்ளார். இதைக்கேட்டதும் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் பால்சாமியை அழைத்துக்கொண்டு மலட்டாறுக்கு சென்றனர். அங்கு அப்புவை புதைத்து வைத்திருந்த இடத்தை பால்சாமி காண்பித்தார். உடனே பால்சாமியின் பெற்றோர், அந்த இடத்தை தோண்டி அப்புவின் உடலை மீட்டு வீட்டிற்கு கொண்டு சென்றனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அப்புவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பால்சாமியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்போல் நாடகமாடினார். அவர் மீது சந்தேகமடைந்த போலீசார், பால்சாமியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.

டி.எடையார் காலனியை சேர்ந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது காலனி மக்கள், பால்சாமிக்கு திருமணமானதில் இருந்து விசே‌ஷ நிகழ்ச்சி, கோவில் திருவிழா போன்ற சமயங்களில் அவர் மட்டும் சொந்த ஊருக்கு வந்து சென்றுள்ளதும், அவரது மனைவி ரத்தினம்மாள், குழந்தைகள் யாரும் இதுவரை டி.எடையார் காலனிக்கு வந்ததில்லை என்பதும், தற்போதுதான் முதன்முதலாக பால்சாமி, அப்புவை அழைத்துக்கொண்டு டி.எடையாருக்கு வந்துள்ளதும் தெரியவந்தது.

இதன் அடிப்படையில் அப்புவை கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டே பெங்களூருவில் இருந்து அவனை டி.எடையாருக்கு அழைத்து வந்து பால்சாமியே கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். அதன்பேரில் பால்சாமியை தனி அறையில் வைத்து அவரிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில், தன்னுடைய 2 குழந்தைகள் சந்தோ‌ஷமாக வாழ்வதற்கு அப்பு இடையூறாக இருந்ததால் அவனை பெங்களூருவில் இருந்து அழைத்து வந்து திட்டமிட்டே கொலை செய்ததை பால்சாமி ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து பால்சாமியை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 7 வயது சிறுவனை தாயின் 2–வது கணவர் அடித்துக்கொன்று ஆற்று மணலில் புதைத்த சம்பவம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story