திருவள்ளூரில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டிய 15 கடைகள் இடித்து அகற்றம்


திருவள்ளூரில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டிய 15 கடைகள் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 14 Dec 2017 4:15 AM IST (Updated: 14 Dec 2017 1:30 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டியிருந்த 15 கடைகள் இடித்து அகற்றப்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் தம்பிரான்குட்டை பகுதியில் நீர்நிலைகளை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் கட்டி நடத்தி வந்தனர். இதனால் மழைக் காலங்களில் தம்பிரான்குட்டை நிரம்பும்போது அந்த மழை நீரானது கடைகளுக்குள் புகும் அபாய நிலை இருந்தது.

இதுபற்றி திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நீர்நிலையை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களுக்கு கடைகளை அப்புறப்படுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் கடைகளை அகற்றாமல் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் செந்தில்குமரன் மற்றும் நகராட்சி பணியாளர்கள், அரசு ஊழியர்கள் மேற்கண்ட இடத்திற்கு சென்று அங்கு நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த 15 கடைகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர்.

நீர்நிலைகளையும், நீர் வழிப்பாதையையும் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன் எச்சரித்துள்ளார்.


Next Story