கன்னியாகுமரியில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


கன்னியாகுமரியில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 14 Dec 2017 5:45 AM IST (Updated: 14 Dec 2017 1:48 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்

ஆலந்தூர்,

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:–

கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘ஒகி’ புயல் பல தலைமுறைகள் காணாத மாபெரும் இழப்பை ஏற்படுத்திவிட்டது.

கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மாயமாகி உள்ளனர். இந்திய கடற்படை அவர்களை மீட்பதற்கான தீவிர முயற்சியில் இறங்கியது. இதன் பயனாக சுமார் 700 மீனவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். சில ஊடகங்கள் சூடான செய்தி தரவேண்டும் என்பதற்காக பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றனர்.

மீனவர்களுக்கு மத்திய–மாநில அரசுகள் எதுவும் செய்யவில்லை என்ற பொய்யான தோற்றம் உருவாக்கப்பட்டு உள்ளது.

வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் கன்னியாகுமரியில் புயல் பாதித்த அனைத்து பகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்தேன். சில அரசியல் காரணங்களை மனதில் கொண்டு, கடற்கரை பகுதிகளுக்கு செல்வதை தவிர்த்தேன்.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஒரு சில இயக்கங்கள் தவறான செய்திகளை பரப்பியது போல் மீனவர்கள் மத்தியில் தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தை 3 பகுதிகளை சுற்றியும் கடல் இருப்பதால் கடற்படை தளம் அமைக்கப்பட வேண்டும். படகுகளுக்கு முறையான பதிவுகள் கிடையாது. ஒவ்வொரு படகுகளும் அதில் செல்பவர்களும் பதிவு செய்யப்பட வேண்டும். அப்போது தான் பேரிடர் நேரங்களில் இழப்புகளை தவிர்க்க முடியும். இதற்கான முயற்சிகளில் நான் ஈடுபடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story