கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. பணிகள் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு


கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. பணிகள் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 14 Dec 2017 4:30 AM IST (Updated: 14 Dec 2017 2:28 AM IST)
t-max-icont-min-icon

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. பணிகள் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாலங்காடு,

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் நருவெளி மாதாகோவில் பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கச்சா எண்ணெய் குழாய்களை புதிதாக பதிக்க இருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து கதிராமங்கலம் கிராம மக்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது பணியாளர்கள் சிலர் குழாய் பதிக்கப்பட்டுள்ள இடத்தில் வர்ணம் பூசி அடையாளப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம் கிராம மக்கள் கேட்டபோது, புதிதாக குழாய் பதிக்கவில்லை என்றும், குழாய் பதிக்கப்பட்டுள்ள இடத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறினர். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து கதிராமங்கலத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் கூறியதாவது:-

நருவெளி மாதாகோவில் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த ஓ.என்.ஜி.சி. ஒப்பந்த பணியாளர்களிடம் காலாவதியான அடையாள அட்டை உள்ளது. அவர்களிடம் விசாரித்தபோது புதிய குழாய் பதிக்கவில்லை என கூறினர். கிராம மக்களின் அனுமதியின்றி கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. எந்த பணிகளையும் மேற்கொள்ள கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஓ.என்.ஜி.சி. பணிகள் நிறுத்தப்பட்டதால் கதிராமங்கலத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்டம் நேற்று 155-வது நாளாக நடந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களை நேற்று மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை சந்திப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் கலெக்டர், கிராம மக்களை சந்திக்கவில்லை. 

Next Story