ஓட்டலில் புகுந்து தொழிலாளர்கள் மீது தாக்குதல்; பொருட்கள் சூறை கைது செய்யக்கோரி கடைகள் அடைப்பு


ஓட்டலில் புகுந்து தொழிலாளர்கள் மீது தாக்குதல்; பொருட்கள் சூறை கைது செய்யக்கோரி கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 13 Dec 2017 10:45 PM GMT (Updated: 13 Dec 2017 9:00 PM GMT)

கொள்ளிடத்தில் மர்மநபர்கள், ஓட்டலில் புகுந்து தொழிலாளர்களை தாக்கி, பொருட்களை சூறையாடினர். அவர்களை கைது செய்யக்கோரி கொள்ளிடத்தில் கடைகள் அடைக்கப்பட்டன

கொள்ளிடம்,

நாகை மாவட்டம், கொள்ளிடம் மெயின்ரோட்டில் சுந்தரராஜன் (வயது 43) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த கடைக்கு நேற்று மர்ம நபர்கள் 10-க்கும் மேற்பட்டோர் உருட்டு கட்டை, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்தனர். பின்னர் அவர்கள், ஓட்டலுக்குள் புகுந்து அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களை தாக்கி வெளியேற்றினர். இதனையடுத்து ஓட்டலில் இருந்த மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். பின்னர் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தொழிலாளர்களை தாக்கி, ஓட்டலை சூறையாடியவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அதனை கண்டித்தும் வியாபாரிகள், கொள்ளிடத்தில் உள்ள அனைத்து கடைகளையும் அடைத்தனர். பின்னர் கொள்ளிடம் வியாபாரிகள் சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கொள்ளிடம் போலீஸ் நிலையத்திற்கு சென்று ஓட்டலை சூறையாடி அட்டகாசம் செய்த மர்ம நபர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி புகார் அளித்தனர். பின்னர் கொள்ளிடம் கடைவீதியில் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை உடனே கைது செய்யவில்லை என்றால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story