‘ஒகி’ புயலால் சேதம்: விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
‘ஒகி‘ புயலால் குமரி மாவட்டத்தில் பயிர்கள் சேதம் அடைந்து இருப்பதால் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். பேட்டி நாகர்கோவிலில், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு நேற்
நாகர்கோவில்,
நாகர்கோவிலில், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
‘ஒகி‘ புயலில் சிக்கி கரைதிரும்பாத மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மாயமான மீனவர்களை தேடும்பணியில் கடலோர காவல்படை, இந்திய கப்பற்படையை சேர்ந்த கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அந்த பணியில் சின்னத்துறை, தூத்தூர் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலில் மாயமானவர்களை மீட்பதற்காக ஒரு படகில் சென்ற 5 மீனவர்கள், நடுக்கடலில் சிக்கி தத்தளித்து கொண்டிருந்துள்ளனர். அவர்களை, ‘வைபவ்‘ என்ற கடற்படை கப்பல் மீட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளும் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் இன்று(வெள்ளிக்கிழமை) கரைதிரும்புவார்கள் என தகவல் உள்ளது.
அரசு அறிவிப்பின்படி இன்னும், 13 நாட்டு படகுகள், 34 விசைப்படகுகளில் சென்ற 400 மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர்களை தேடும் பணி தொய்வில்லாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த 2009–ம் ஆண்டு வீசிய ‘பியான்‘ புயலினால் இறந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கும், ‘ஒகி‘ புயலில் சிக்கி இறந்த மீனவர்களின் குடும்பத்துக்கு வழங்குவது போன்று இழப்பீடு தொகை மற்றும் நிவாரண உதவிகளை அரசு வழங்கவேண்டும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் மனு அளித்துள்ளனர். அந்த மனு, அரசின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
‘ஒகி‘ புயலால் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை பிரித்து பார்க்கக்கூடாது. இழப்பீடு என்பது எல்லோருக்கும் சமஅளவில் இருக்கவேண்டும். அது இல்லாத போதுதான் விரும்பத்தகாத விஷயங்கள் நடைபெறுகின்றன. நாளை(இன்று) நடைபெறும் விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்துக்கு பா.ஜனதா தனது ஆதரவை தெரிவிக்கிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் அரசியல் கட்சிகளுக்கு இடையே எவ்வித பாகுபாடும் இல்லை. மேலும், புயலால் பயிர்கள் சேதம் அடைந்து இருப்பதால் விவசாயிகளுக்கான பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். புதிதாக பயிர்க்கடன் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பேட்டியின் போது பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்துக்கிருஷ்ணன், கணேசன், தர்மலிங்க உடையார் மற்றும் மீனவ கிராமத்தை சேர்ந்தவர்கள் அருகில் இருந்தனர்.