ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து பேசி முடிக்க கோரி போக்குவரத்து தொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டம்
ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து பேசி முடிக்க கோரி போக்குவரத்து தொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது.
திருச்சி,
போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து பேசி முடித்திட வேண்டும். பிறதுறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். 2003–க்கு பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பென்சன் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள போக்குவரத்துக்கழக மண்டல அலுவலகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். தொ.மு.ச. பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். மண்டல தலைவர் குணசேகரன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். ஏ.ஐ.டி.யூ.சி. தலைவர் மணி, பொதுச்செயலாளர் சுப்பிரமணி மற்றும் சி.ஐ.டி.யூ. உள்பட பல தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர். போராட்டம் தொடர்ந்து 48 மணிநேரம் நடைபெறுகிறது.
இது குறித்து மண்டல தலைவர் குணசேகரன் கூறுகையில், “போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளோம். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு சார்பில் 3 பேர் கொண்ட குழு அமைத்து 6 மாதமாகியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளோம். திருச்சி மண்டலத்தில் உள்ள 19 கிளைகளிலும் போராட்டம் நடக்கிறது. திருச்சி மண்டலத்தில் 1,800 அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. காலை ஷிப்ட்டில் உள்ள கண்டக்டர், டிரைவர்கள் பணியை முடித்துவிட்டு மதியத்துக்கு பிறகு போராட்டத்தில் கலந்து கொள்வார்கள்“ என்றார்.