ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்தக்கோரி போக்குவரத்துக்கழக ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்


ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்தக்கோரி போக்குவரத்துக்கழக ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 15 Dec 2017 4:15 AM IST (Updated: 15 Dec 2017 12:49 AM IST)
t-max-icont-min-icon

ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்தக்கோரி சேலத்தில் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாருடன் வாக்குவாதம், தள்ளுமுள்ளு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைந்து முடித்து அமல்படுத்த வேண்டும், குறைந்தபட்ச சம்பளம் ரூ.18 ஆயிரம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவை பணப்பயன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் பங்கு பெறும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர்.

அதன்படி சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள மண்டல போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் அலுவலகம் முன்பு நேற்று காலை தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களும் திரண்டனர்.

பின்னர், அவர்கள் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர். ஆனால் அவர்களை உள்ளே அனுமதிக்காமல் போலீசார் வெளியில் தடுத்து நிறுத்தினர். இதனால் போக்குவரத்து ஊழியர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்களுக்குள் தள்ளுமுள்ளு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அனைவரும் அலுவலகத்திற்குள் சென்று தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, ஊழியர்கள் மத்தியில் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் பேசும்போது, போக்குவரத்துக்கழக ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தால் சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள போக்குவரத்துக்கழக அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 2-வது நாளாக இன்றும் (வெள்ளிக்கிழமை) போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story