ஊதிய உயர்வு வழங்கக்கோரி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்


ஊதிய உயர்வு வழங்கக்கோரி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 15 Dec 2017 4:15 AM IST (Updated: 15 Dec 2017 1:30 AM IST)
t-max-icont-min-icon

ஊதிய உயர்வு, ஓய்வூதிய பலன்களை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் நேற்று அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு, பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மண்டல போக்குவரத்து அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர்.

இதன்படி கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மண்டல போக்குவரத்து தலைமை அலுவலகத்தில் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக அலுவலக நுழைவு வாயில் முன் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க மண்டல தலைவர் பெரியசாமி பேசியதாவது:-

புதிய பஸ்கள்

தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளாக போக்குவரத்து கழகங்களுக்கு போதிய அளவில் புதிய பஸ்களை வழங்க வில்லை. இதன் காரணமாக பழைய பஸ்களையே இயக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே உடனடியாக புதிய பஸ்களை வழங்க வேண்டும். மேலும் ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு உடனடியாக பணப்பலன்களை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். தொழி லாளர்களுக்கு வழங்க வேண் டிய ரூ.7 ஆயிரம் கோடியை அரசு வழங்க முன்வர வேண் டும். பல தொழிலாளர்களுக்கு ஆண்டுகள் பல கடந்த பின்னரும் ஓய்வூதிய பலன்கள் கிடைக்காத நிலைமைதான் உள்ளது.

ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைபடுத்தி ஊதிய உயர்வு வழங்குவதோடு, அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த காத்திருப்பு போராட்டத்தில் தற்போது 9 தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் நாளை (இன்று) மாலை வரை நடைபெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அரசு பஸ் சேவை பாதிக்காது

இதில் எல்.பி.எப். தொழிற்சங்கத்தை சேர்ந்த ரத்தினவேலு, சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த காளியப்பன், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தை சேர்ந்த செல்வராஜ், எச்.எம்.எஸ். தொழிற்சங்கத்தை சேர்ந்த ராஜா உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். போக்குவரத்து கழக தொழிலாளர்களின் போராட்டத்தை முன்னிட்டு மண்டல அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

போக்குவரத்து கழகத்தை சேர்ந்த டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் தங்களது பணி முடிந்த பின்னரே இந்த போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். எனவே அரசு பஸ் சேவை பாதிப்பு எதுவும் ஏற்படாது என்பதால், அரசு பஸ்கள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story