போக்குவரத்து சிக்னல் போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் இயக்கி வைத்தார்
முத்தியால்பேட்டை ஏழை மாரியம்மன்கோவில் சந்திப்பில் போக்குவரத்து சிக்னலை போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் இயக்கிவைத்தார்.
புதுச்சேரி,
புதுவை முத்தியால்பேட்டை ஏழை மாரியம்மன்கோவில் சந்திப்பில் போக்குவரத்து போலீஸ் சார்பில் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பயன்பாட்டிற்கு கொண்டுவரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ்ரஞ்சன் வரவேற்றுப் பேசினார். போக்குவரத்து சிக்னலை போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் இயக்கி வைத்தார்.
அப்போது வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. பேசியதாவது:–முத்தியால்பேட்டை பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தற்போது புதியதாக அமைக்கப்பட்டுள்ள சிக்னலில் கூடுதல் போலீசாரை பணியமர்த்தி நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.காந்திவீதி–சாலைத்தெரு சந்திப்பில் போலீஸ் பூத் அமைக்க ஏற்பாடுகள் செய்து 8 மாதங்கள் முடிந்துவிட்டன. ஆனால் இதுவரை அந்த பூத் திறக்கப்படவில்லை. மேலும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து குற்றவாளிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.
புதுவை முத்தியால்பேட்டை காவல்நிலையத்தின் பின்புறம் உள்ள போலீஸ் குடியிருப்பில் கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்துள்ளன. அதை உடனடியாக சீர் செய்யவேண்டும். இவ்வாறு வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. பேசினார்.
நிகழ்ச்சியில் போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் பேசும்போது, புதுவையில் அவ்வப்போது விபத்துகள் நடக்கின்றன. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அதை தடுக்கும் விதமாக இதேபோல் சிக்னல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என்று குறிப்பிட்டார்.
விழாவில் போலீஸ் சூப்பிரண்டுகள் தெய்வசிகாமணி, ரக்ஷனாசிங், குணசேகரன், இன்ஸ்பெக்டர்கள் மாறன், ஹேமச்சந்திரன், வரதராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முடிவில் போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.