பள்ளி– கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் நடைமுறைகள் குறித்து பயிற்சி அளிக்க ‘வாக்காளர் கல்வி மன்றம்’


பள்ளி– கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் நடைமுறைகள் குறித்து பயிற்சி அளிக்க ‘வாக்காளர் கல்வி மன்றம்’
x
தினத்தந்தி 16 Dec 2017 3:00 AM IST (Updated: 15 Dec 2017 6:59 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில், தேர்தல் நடைமுறைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க பள்ளி–கல்லூரிகளில் வாக்காளர் கல்வி மன்றம் அமைக்கப்படும் என கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில், தேர்தல் நடைமுறைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க பள்ளி–கல்லூரிகளில் வாக்காளர் கல்வி மன்றம் அமைக்கப்படும் என கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள், கலைக்கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள், வாக்குசாவடிகள் ஆகியவற்றில் வாக்காளர் கல்வி மன்றமும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் வாக்காளர் விழிப்புணர்வு அமைப்பும் அமைப்பது தொடர்பாக, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.

வாக்காளர் கல்வி மன்றம்

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது;–

வாக்காளர் கல்வி மன்றமும், வாக்காளர் விழிப்புணர்வு அமைப்பும், எதிர்கால வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்களுக்கு தேர்தல் நடைமுறை, தேர்தலில் வாக்களிப்பது, வாக்குப்பதிவு எந்திரங்களின் பயன்பாடு மற்றும் ஜனநாயக நடைமுறைகள் தொடர்பாக பயிற்சி அளிக்க ஏற்படுத்தப்படுகின்றன.

இதில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள், கலை மற்றும் தொழில் நுட்ப கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் படிக்கும் மாணவர்கள் உறுப்பினர் ஆகலாம். வகுப்பிற்கு ஒரு பிரதிநிதி வீதம் தேர்வு செய்யப்பட்டு செயற்குழு அமைக்கப்படும். கல்லூரிகளில் மட்டும் செயற்குழு உறுப்பினர்களால் தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோர் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஒருங்கிணைப்பு அலுவலர்கள்

பள்ளிகளில் தேர்தல் பணியில் அனுபவம் பெற்ற 2 ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு அலுவலர்களாக செயல்படுவார்கள். கல்லூரிகளில் அரசியல் அறிவியல் துறையை சேர்ந்த ஒன்று அல்லது 2 ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு அலுவலர்களாக செயல்படுவார்கள்.

இது தொடர்பாக, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இந்த மன்றத்தின் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் நடைமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் உதவி கலெக்டர்கள், தேர்தல் பிரிவு தாசில்தார் மற்றும் பள்ளி, கல்லூரிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story