2009–ல் இறந்து போனவர் பெயரில் போலி பத்திரம், கும்பல் கைது
2009–ல் இறந்து போனவர் பெயரில் ஆள் மாறாட்டம் செய்து, போலி பத்திரங்கள் தயாரித்து நிலத்தை விற்பனை செய்த 3 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்,
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா டோவர்டெரேஸ் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது 47). இவர், துபாயில் வசித்து வருகிறார். இவருடைய தந்தை கிருஷ்ணனுக்கு சொந்தமான 5,175 சதுரஅடி நிலம் சென்னை சேலையூர் அருகே உள்ள மாடம்பாக்கம் சாந்திநிகேதன் காலனியில் உள்ளது.
இந்த நிலத்தை அவர், 1984–ம் வருடம் வசுமதி சீனிவாசன் என்பவரிடம் வாங்கி இருந்தார். 2009–ல் கிருஷ்ணன் இறந்து விட்டார். அதன் பிறகு அந்த நிலம் வெங்கட்ராமனின் தாயார் உஷா கிருஷ்ணன் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டது. கடந்த 2015–ம் ஆண்டு இந்த நிலத்தை சுற்றி சுவர் அமைத்து கேட் போட்டு பூட்டி வைத்திருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இந்த நிலத்தில் தனியார் கட்டுமான நிறுவனத்தினர் கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து துபாயில் உள்ள வெங்கட்ராமனுக்கு மாடம்பாக்கத்தில் உள்ள அவருடைய உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த வெங்கட்ராமன், கடந்த 8–ந்தேதி துபாயில் இருந்து சென்னை வந்து நிலம் தொடர்பாக இணைய தளத்தில் வில்லங்க சான்றிதழ் பார்த்தார்.
அப்போது 2016–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனிநபர்களுக்கு தானபத்திரம் மூலம் அந்த சொத்தினை அனுபவிக்க கிருஷ்ணன் உரிமை அளித்ததாக போலி பத்திரங்கள் தயார் செய்து நிலத்தை ஆக்கிரமித்துள்ளது தெரிய வந்தது.
2009–ல் இறந்து போன தனது தந்தை கிருஷ்ணன் பெயரில் 2014–ல் போலியாக வாக்காளர் அடையாள அட்டை தயாரித்து, 2016–ம் ஆண்டு அந்த நிலத்தை அனுபவிக்க அவர் தனி நபர்களுக்கு உரிமை அளித்தது போல போலி பத்திரங்கள் தயார் செய்து இருப்பது தெரிந்தது.
இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த வெங்கட்ராமன், இது தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனிடம் புகார் செய்தார். இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி சேலையூர் போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.
சேலையூர் போலீஸ் உதவி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, இன்ஸ்பெக்டர் செல்லப்பா மற்றும் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.
வெங்கட்ராமனின் தந்தை வசுமதி சீனிவாசனிடம் கிரயத்துக்கு வாங்கிய பத்திரப்பதிவு எண்ணை வைத்து அதே எண்ணில் அவர் மாதவன் என்பவரிடம் நிலத்தை வாங்கியதாக போலிபத்திரம் தயார் செய்து உள்ளனர்.
மாதவன் என்பவரிடம் இருந்து அந்த நிலத்தை 1975–ல் வசுமதி சீனிவாசன் வாங்கி, அதை 1984–ல் வெங்கட்ராமனின் தந்தை கிருஷ்ணனுக்கு விற்பனை செய்துள்ளார். ஆனால் மாதவனே நேரடியாக கிருஷ்ணனுக்கு நிலத்தை விற்றதாக போலி பத்திரம் தயாரித்து ஆள் மாறாட்டம் செய்து பலே மோசடியில் ஒரு கும்பல் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த நிலமோசடி தொடர்பாக சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ்குமார்(40) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் திருச்சி சமத்துவபுரத்தை சேர்ந்த எத்திராஜ்(65) என்பவரை கிருஷ்ணன் என ஆள் மாறாட்டம் செய்து போலி பத்திரங்கள் தயாரித்து நிலம் விற்பனை செய்தது தெரிந்தது.
போலி பத்திரங்கள் மூலம் 3 முறை பவர் பத்திரம் பதிவு செய்து கட்டுமான நிறுவனத்தை சேர்ந்தவரிடம் நிலம் விற்பனை செய்து முதல் தவணையாக ரூ.75 லட்சம் பெற்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து சுரேஷ்குமார், எத்திராஜ் மற்றும் இந்த நில மோசடி கும்பலை சேர்ந்த ஆதம்பாக்கத்தை சேர்ந்த ஆன்ந்தராஜ் என்ற சிவா(40) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் இவர்களுக்கு உடந்தையாக இருந்து நிலமோசடியில் ஈடுபட்ட சந்தோஷ், ஜானகிராமன், பாலாஜி, ரகு உள்ளிட்ட மேலும் சிலரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.