ஈரோட்டில் போக்குவரத்து ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டம்
ஈரோட்டில் போக்குவரத்து கழக ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
ஈரோடு,
போக்குவரத்து கழக ஊழியர்கள் ஓய்வு பெற்றவுடன் பணப்பலன்களை வழங்க வேண்டும். ஓய்வூதியர்களின் நிலுவைத்தொகையை உடனடியாக கொடுக்க வேண்டும். மற்ற துறைகளுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். 1–4–2003 தேதிக்கு பின் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்ய வேண்டும்.
புதிய ஊழியர்களுக்கு பணி எண் வழங்கி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் காத்திருப்பு போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.
ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக மண்டல அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இரவு விடிய, விடிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடைய போராட்டம் 2–வது நாளாக நேற்று தொடர்ந்தது. போராட்டத்திற்கு கூட்டமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் என்.முருகையா தலைமை தாங்கினார். இதில் போக்குவரத்து ஊழியர்கள் திரண்டு நின்று ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இந்த போராட்டத்தில் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.