கடலூரில் நடந்து வந்த போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடலூர் மண்டல பொதுமேலாளர் அலுவலகம் முன்பு அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் நேற்று முன்தினம் முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்,
அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஓய்வூதிய பணபலன்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடலூர் மண்டல பொதுமேலாளர் அலுவலகம் முன்பு அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் நேற்று முன்தினம் முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று சென்னையில் போக்குவரத்துத்துறை அமைச்சருடன் நடத்தி பேச்சுவார்த்தைக்கு பிறகு, போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ்பெறுவதாக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினரும் அறிவித்தனர். ஆனால் இதை ஏற்க மறுத்த தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் கடலூரில் மண்டல பொதுமேலாளர் அலுவலகம் முன்பும் காத்திருப்பு போராட்டம் செய்த தொழிலாளர்கள், நேற்று இரவு 7 மணிக்கு போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டு பணிக்கு திரும்பினர். இதையடுத்து பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்ட பஸ்கள் வெளியூர்களுக்கு புறப்பட்டு சென்றன. தொடர்ந்து புறநகர் மற்றும் டவுன்பஸ்கள் வழக்கம்போல் பணிமனைக்கு வந்து சென்றதை பார்க்க முடிந்தது.