விமான நிலைய விரிவாக்கத்துக்கு கையகப்படுத்தப்படும் நில உரிமையாளர்களுக்கு நியாயமான இழப்பீட்டு வழங்க நடவடிக்கை


விமான நிலைய விரிவாக்கத்துக்கு கையகப்படுத்தப்படும் நில உரிமையாளர்களுக்கு நியாயமான இழப்பீட்டு வழங்க நடவடிக்கை
x
தினத்தந்தி 16 Dec 2017 4:00 AM IST (Updated: 16 Dec 2017 1:03 AM IST)
t-max-icont-min-icon

கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு கையகப்படுத்தப்படும் நில உரிமையாளர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று நில நிர்வாக ஆணையாளர் மோகன் பியாரே தெரிவித்து உள்ளார்.

கோவை,

கோவை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் விமானங்கள் புறப்படுவதற்கு போதிய அளவில் ஓடுபாதை இல்லை. இதனால் இந்த விமான நிலையத்தை விரிவு படுத்த வேண்டும் என்று தொழிற்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய அந்த பகுதியில் உள்ள சுமார் 600 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிடப்பட்டது.

இதில் அரசு மற்றும் ராணுவத்துக்கு சொந்தமான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன. மீதியுள்ள நிலங்கள் தனியார் நிலங்களாகும். இந்த நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை நிர்ணயம் செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. இதற்காக சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுடன் அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்பட வில்லை.

இந்த நிலையில் தமிழக நில நிர்வாக ஆணையாளர் மோகன் பியாரே கோவை விமான நிலையம் விரிவாக்கம் குறித்து நேற்று கோவையில் ஆய்வு செய்தார். அப்போது நில ஆர்ஜிதம் செய்யப்பட உள்ள உப்பிலிபாளையம், காளப்பட்டி, இருகூர், சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்றார். அப்போது அவர், நில ஆர்ஜிதம் செய்யப்பட உள்ள குடியிருப்புகளின் எல்லைகள், தரிசு நிலங்கள், குடியிருப்பு பகுதிகள், விமான நிலைய குத்தகை நிலங்கள் மற்றும் விமான நிலையத்தை சுற்றிலும் மாற்று வழித் தடங்களை உருவாக்கும் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து கோவை கலெக்டர் அலுவலகத்தில் நில உரிமையாளர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு நில நிர்வாக ஆணையாளர் மோகன் பியாரே தலைமை தாங்கினார். இதில் இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், மாற்று இடம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து நில உரிமையாளர்கள் மனுக்கள் கொடுத்தனர். அதை அவர் பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:–

கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் வழங்கும் உரிமையாளர்களுக்கு நியாயமான இழப் பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையம் விரிவாக்கத்தால் சரக்கு போக்குவரத்தை அதிகரிக்க முடியும். இதன்மூலம் கோவை மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி உயர்வதோடு, தகவல் தொழில்நுட்பத்துறையும் ஏற்றம் பெறும்.

இதுதவிர திருப்பூர் பனியன் ஏற்றுமதி பலமடங்கு உயரும். வேலைவாய்ப்புகளும் அதிகளவில் உருவாகும். மேலும் புதிய தொழில் தொடங்க தொழில் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் மையமாக கோவை திகழும். சிங்கப்பூர், மலேசியா மற்றும் வடகிழக்கு ஆசிய நாடுகளுக்கும் அதிகளவில் விமான சேவை வழங்குவதால் கோவை மாவட்டத்தின் தொழில்வளர்ச்சி பெருகி இந்தியாவிலேயே முன்னோடி மாவட்டமாக திகழும்.

கோவையின் வளர்ச்சி சார்ந்து, பன்னாட்டு நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளை பெறும் வகையிலும், முழுவதும் பொதுமக்களின் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு பணிகள் மேற்கொள்ளப்படும். எனவே இந்த பணிகளுக்கு பொதுமக்கள் தங்களது முழு ஒத்துழைப்பை தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story