கோவை ஏ.டி.எம். கொள்ளை கும்பல் தலைவனை பிடிக்க தனிப்படை

எ.டி.எம். எந்திரங்களை உடைத்து பணத்தை கொள்ளையடித்த கொள்ளை கும்பல் தலைவனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் ஏற்கனவே கைதான 8 பேர் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கோவை,
அதன்பேரில் மேற்கு மண்டல போலீசார் தீவிர விசாரணை நடத்தி ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மோஷம்கான் (வயது 34), முபாரக் (30), சுபேர் (19), அரியானாவை சேர்ந்த மற்றொரு சுபேர் (33), அமீன் (34), அமித்குமார் (30), உத்தரபிரதேசத்தை சேர்ந்த முஸ்தாக் (32), பீகாரை சேர்ந்த சுல்பிஹீர் (25) ஆகிய 8 பேரை கைது செய்தனர்.
கைதான 8 பேரும் நேற்றுக்காலை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. பின்னர் அவர்கள் கோவை 6–வது எண் ஜுடிசி யல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 8 பேரையும் 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி மாஜிஸ்திரேட்டு ராஜவேலுவிடம் போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்தனர். இதில் அவர்கள் 8 பேரையும் 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட்டு அனுமதி வழங்கினார்.
இந்த நிலையில், கோவையில் கைதான ஏ.டி.எம். கொள்ளையர்கள் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
டெல்லி, ராஜஸ்தான், அரியானா, பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 50 பேர் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது மராட்டிய மாநிலத்தில் 12 ஏ.டி.எம். கொள்ளை வழக்குகள், ஆந்திரா, கர்நாடகா, கேரளா. மராட்டியம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த கும்பல் 3 குழுவாக பிரிந்து கைவரிசை காட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதில் ஒரு குழுவுக்கு உத்தரபிரதேசத்தை சேர்ந்த முஸ்தாக் இத்ரிஸ் தலைமை தாங்கி உள்ளார். மற்றொரு குழுவுக்கு அரியானாவை சேர்ந்த சுபேர் தலைமை தாங்கினார். இவர்களை எல்லாம் ஒருங்கிணைந்த ஒட்டுமொத்த குழுவுக்கும் டெல்லியை சேர்ந்த அஸ்லாம் என்பவர் தலைவனாக செயல்பட்டுள்ளார். இவர் தான் கோவையில் கொள்ளையடித்த ரூ.27 லட்சத்துடன் தப்பி சென்று விட்டதாக கூறப்படு கிறது. அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை கும்பல் 3 கார்கள், ஒரு லாரியில் வந்துள்ளனர். இந்த கும்பல் ஏ.டி.எம். மையம் இருக்கும் இடத்தில் இருந்து சற்று தள்ளி வாகனத்தை நிறுத்தி விட்டு கொள்ளையடிப்பார்கள். பின்னர் கொள்ளை அடித்த பணம் மற்றும் ஆயுதங்களை லாரியில் வைத்து விடுவார்கள்.
அதன்படி கடந்த 10–ந் தேதி 2 ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்த பணத்தை வேறு ஒரு காரில் வந்த கொள்ளை கும்பல் தலைவனிடம் கொடுத்து அனுப்பி உள்ளனர். 3 குழுவாக பிரிந்து சென்றதில் ஒரு குழுவினர் மட்டும் தற்போது சிக்கி உள்ளனர். மீதி உள்ள 2 குழுக்களில் எத்தனை பேர் உள்ளனர். எங்கு இருக்கிறார்கள்? என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதான கொள்ளையர்கள் பற்றிய விவரங்களை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி விசாரணை நடந்து வருகிறது. வெளிமாநில போலீசார் இங்கு வந்து விசாரிக்கும் போது கும்பல் பற்றிய மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.