போக்குவரத்து தொழிலாளர்கள் சாலை மறியல் மதுரையில் பஸ்கள் ஓடவில்லை


போக்குவரத்து தொழிலாளர்கள் சாலை மறியல் மதுரையில் பஸ்கள் ஓடவில்லை
x
தினத்தந்தி 16 Dec 2017 3:30 AM IST (Updated: 16 Dec 2017 1:27 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மதுரையில் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை.

மதுரை,

தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் சேமிப்பு நிதி, ஓய்வு கால பணப்பலன் என சுமார் 7ஆயிரம் கோடி ரூபாயினை அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் செலவு செய்துள்ளது. இதனால் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பணப் பலன்கள் கிடைக்கப்பெறாமல் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் அவர்களுக்கு மாதம் முதல் தேதியில் கிடைக்க வேண்டிய ஓய்வூதியம் தாமதமாக வழங்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வும் தடைபட்டுள்ளது.

தற்போது காலாவதியான பஸ்கள் இயக்கப்படுவளதால் பொதுமக்கள் பயணம் செய்வதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே அவற்றை மாற்றுவதற்கு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். 2003–ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் சேர்ந்த பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக்கழகங்களின் தொழிலாளர்கள் 48 மணிநேர காத்திருப்பு போராட்டத்தை நேற்றுமுன்தினம் தொடங்கினர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையிலும் போராட்டம் நடந்தது. மதுரை பைபாஸ் சாலையில் உள்ள போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு எல்.பி.எப். பொதுச் செயலாளர் அல்போன்ஸ் தலைமையில் போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நேற்று 2–வது நாளாக நடந்தது.

இதில் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இரவில் வீடுகளுக்கு செல்லாமல் அங்கேயே தங்கி தங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர்.

நேற்று மாலை 5 மணிக்கு தங்களது காத்திருப்பு போராட்டத்தை முடித்து விடுவதாக போக்குவரத்து தொழிலாளர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்தநிலையில், மாலை 5 மணியளவில் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக தொழிற்சங்க நிர்வாகிகள் கூறினர். ஆனால் இதற்கு போக்குவரத்து தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் தொழிற்சங்க நிர்வாகிகள்–தொழிலாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த போக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறி அங்குள்ள பிரதான சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பைபாஸ் சாலையில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன.

இந்த தகவல் காட்டுத்தீபோல் பரவியது. இதைத்தொடர்ந்து மதுரையில் உள்ள பல்வேறு பணிமனைகள் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆங்காங்கே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுபோல் பஸ் நிலையங்களில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்களை இயக்க மாட்டோம் என வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட தொடங்கினர். இதனால் பஸ் நிலையங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்படாமல் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

சுமார் 1 மணி நேரம் நீடித்த இந்த போராட்டம் பேச்சு வார்த்தைக்கு பின் முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்கள் பைபாஸ் சாலையில் இருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் கூறுகையில், “இதே கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு போராடினோம். அப்போது நிறைவேற்றுவதாக கூறிய அரசு எங்களை ஏமாற்றி விட்டது. தற்போதும் நாங்கள் போராடாமல் இருந்தால் எங்கள் கோரிக்கைகள் ஒருபோதும் நிறைவேற்றப்படாது. அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை நாங்கள் போராடிக்கொண்டிருப்போம். தமிழக அரசு தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்களை வஞ்சித்து வருகிறது. 28–ந்தேதி பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு எடுப்பதாக அரசு சார்பில் கூறியிருக்கிறார்கள். அப்போதும் சரியான முடிவு எடுக்காவிட்டால் பஸ்களை இயக்க விடாமல் போராட்டம் நடத்துவோம்” என்றனர்.

நேற்று நடந்த போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தால் மதுரையில் 70 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை.

ஏற்கனவே காத்திருப்பு போராட்டத்தால் நேற்றுமுன்தினம் முதலே குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று மாலை நடந்த மறியலால் போக்குவரத்து அடியோடு ஸ்தம்பித்தது. பெரியார், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி பஸ் நிலையங்கள் வெறிச்சோடின.

பஸ்கள் ஓடாததால் வேலைக்கு சென்று திரும்புபவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவ–மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மறியல் போராட்டம் முடிந்த பிறகும் ஒரு சில பஸ்களே இயங்கப்பட்டன. இதனால் அனைத்து பஸ்களிலும் கூட்டம்– கூட்டமாக மக்கள் ஏறிச் சென்றனர்.

இதற்கிடையே பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், கோரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஒரு சில மினிபஸ்கள் இயக்கப்பட்டன. ஷேர் ஆட்டோக்களும் விறுவிறுப்பாக இயங்கி அதிக அளவில் பயணிகளை ஏற்றிச்சென்றன.


Next Story