குமரி மேற்கு மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


குமரி மேற்கு மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x
தினத்தந்தி 16 Dec 2017 4:15 AM IST (Updated: 16 Dec 2017 1:56 AM IST)
t-max-icont-min-icon

குமரி மேற்கு மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டன.

குழித்துறை,

ஒகி புயலால் உயிரிழந்த அனைவருக்கும் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு தகுந்த நிவாரண தொகை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட அனைத்து விவசாய அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு பா.ஜனதா உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மார்த்தாண்டம் அருகே, கழுவன்திட்டை, ஆலுவிளை, மேல்புறம் போன்ற இடங்களில் அரசு பஸ்கள் மீது கல்வீசும் சம்பவங்கள் நடந்தன. இதில் ஒரு ஆம்னி பஸ் உள்பட 4 பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டன.

நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்சியை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் குழித்துறை அருகே சென்றபோது, மர்ம நபர்கள் பஸ் மீது கல்வீசினர். இதில் பஸ் சேதமடைந்தது. இதனால், ஆத்திரமடைந்த பக்தர்கள் குழித்துறையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் விரைவில் சென்றுவிடுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து பக்தர்கள் வேகமாக புறப்பட்டு சென்று விட்டனர்.

நேற்று காலையில் சில கேரள அரசு பஸ்கள் வழக்கம் போல் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்தன. மார்த்தாண்டம் அருகே வடக்குதெரு பகுதியில் 4 கேரள அரசு பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டன. இதையடுத்து கேரள அரசு பஸ்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு உள்பட்ட பகுதியில் நேற்று மதியம் வரை 8 பஸ்களின் கண்ணாடி கல்வீசி உடைக்கப்பட்டதாக புகார்கள் வந்தன. இதுதொடர்பாக போலீசார் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நேற்று காலையில் 8 மணி வரை மார்த்தாண்டத்தில் இருந்து எந்த பஸ்களும் இயக்கப்படவில்லை. அதன்பின்பு நாகர்கோவில் போன்ற பகுதிகளிக்கு போலீஸ் பாதுகாப்புடன் 3,4 பஸ்கள் ஒன்றாக சேர்த்து இயக்கப்பட்டன. ஆனால், பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

இதற்கிடையே ஆங்காங்கே பஸ்கள் மீது கல்வீசும் சம்பவங்களும் நடைபெற்றன. கல்வீசும் தகவல் கிடைத்தும் பஸ் போக்குவரத்தை நிறுத்துவதும், சிறிது நேரம் கழித்து மீண்டும் போக்குவரத்தை தொடங்குவதுமாக இருந்தது.

மார்த்தாண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, நாகர்கோவில்– திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை, மார்க்கெட் சாலை, வடக்குத்தெரு போன்ற பகுதிகளில் டீக் கடைகள், ஓட்டல்கள், பர்னிச்சர் கடைகள் போன்றவை திறக்கவில்லை. இதனால் வணிக வளாகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

குமரி–கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளையில் நேற்று பெரும் பாலான கடைகள் அடைக்கப் பட்டிருந்தன. பஸ்கள் எதுவும் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. கேரள பஸ்கள் எல்லைப் பகுதியான இஞ்சிவிளை வரை வந்து சென்றன.

குலசேகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான திருநந்திக்கரை, மணியங்குழி, சீரோபாயிண்ட், பேச்சிப் பாறை, திற்பரப்பு, பொன்மனை, வெண்டலிகோடு, செருப்பாலூர் போன்ற பகுதிகளில் நேற்று கடைகள் முழுமையாக அடைக்கப் பட்டிருந்தன. மேலும், இந்த பகுகளில் பஸ்கள் ஓடவில்லை.

பள்ளிகள், தனியார் நிறுவனங்கள் போன்றவை இயங்கவில்லை. சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாக இருந்தது.

அருமனை பகுதியில் நேற்று காலை முதல் அனைத்து கடைகள் அடைக்கப் பட்டிருந்தன. குறிப்பாக அருமனை, களியல், முழுக்கோடு, உத்திரங் கோடு, சிதறால், முழுக்கோடு போன்ற பகுதிகளில் உள்ள டீக்கடைகள், பேக்கரி, ஓட்டல்கள், பர்னிச்சர் கடைகள் போன்றவை அடைக்கப்பட்டிருந்தன.

அருமனை பகுதியில் நேற்று காலையில் ஒரு சில பஸ்கள் ஓடின. காலையில் 9.30 மணியளவில் அருமனையில் இருந்து ஒரு அரசு பஸ் மார்த்தாண்டம் நோக்கி புறப்பட்டது. அந்த பஸ் பனங்கரை பகுதியில் சென்றபோது, அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் பஸ் மீது கல்வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில், பஸ்சின் கண்ணாடிகள் உடைந்தன. இதுபோல், சிறிது நேரம் கழித்து பனங்கரையை அடுத்த அம்பலக்கடை என்ற இடத்தில் 2 அரசு பஸ்களின் கண்ணாடி கல்வீசி உடைக்கப்பட்டன.

இதையடுத்து பஸ் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப் பட்டது. உடைக்கப் பட்ட 3 பஸ்களும் அருமனை போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டு நிறுத்தப் பட்டன.

அருமனை பகுதியில் பெரும் பாலான பள்ளிகள் இயங்கின. ஆனால், பஸ் போக்குவரத்து இல்லாததால் மாணவ– மாணவிகள் பல கிலோ மீட்டர் தூரம் நடந்தும், ஆட்டோ, கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங் களிலும் பள்ளிகளுக்கு வந்தனர்.

இதுபோல், புதுக்கடை, நித்திரவிளை, காஞ்சாம்புறம், கொல்லங்கோடு போன்ற பகுதிகளில் கடைகள் அடைக்கப் பட்டிருந்தன. இந்த பகுதிகளில் பஸ் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்தன. கருங்கலில் நேற்று முன்தினம் இரவு ஒரு அரசு பஸ் கல்வீசி கண்ணாடி உடைக்கப்பட்டது.

தக்கலையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப் பட்டிருந்தன. குறைவான அளவு பஸ்களே ஓடின. தக்கலை அருகே பத்மநாபபுரம், பரைக்கோடு போன்ற பகுதிகளில் 3 பஸ்களின் கண்ணாடி கல்வீசி உடைக்கப் பட்டன.

சாலையில் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாகவே இருந்தன. முழு அடைப்பு காரணமாக குமரி மேற்கு மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டது.


Next Story